ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்

மசோதா ஒன்றிற்கு வாக்களிப்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், தன் கட்சி உறுப்பினர்களான ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களையே பணியிடைநீக்கம் செய்தார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
பிரித்தானியாவில், இரண்டு பிள்ளைகளுக்கு மேல் இருக்கும் குடும்பங்களில், அந்த இரண்டு பிள்ளைகளுக்கு மட்டுமே அரசின் சில சலுகைகள் கிடைக்கும்.
மற்ற பிள்ளைகளுக்கு சலுகைகள் கிடையாது என்னும் ஒரு விதி உள்ளது. இதனால், அதிக பிள்ளைகள் இருக்கும் குடும்பங்கள் வறுமையில் வாடுவதாக பல அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஆகவே, The Scottish National Party என்னும் கட்சி, இந்த விதியை நீக்குவதற்காக, மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது. ஆனால், ஆளும் லேபர் கட்சி அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்தது.
அதன்படி, மசோதாவுக்கு எதிராக 363 வாக்குகளும், ஆதரவாக 103 வாக்குகளும் கிடைக்க, மசோதா தோல்வியடைந்தது.
இதற்கிடையில், பிரதமரின் முடிவுக்கு எதிராக, லேபர் கட்சியைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதனால் கோபமடைந்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அதிரடியாக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தார்.
ஆறு மாதங்களுக்கு பிறகு பிரதமரின் முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



