நாட்டின் பொருளாதார மீட்சியில் ஜப்பானுக்கு மிகமுக்கிய பங்கு உண்டு: அலி சப்ரி

#SriLanka #Ali Sabri #Japan
Mayoorikka
1 year ago
நாட்டின் பொருளாதார மீட்சியில் ஜப்பானுக்கு மிகமுக்கிய பங்கு உண்டு: அலி சப்ரி

இலங்கையின் பொருளாதார மீட்சியில் ஜப்பான் பரஸ்பர நன்மையளிக்கக்கூடிய மிகமுக்கிய வகிபாகத்தைக் கொண்டிருப்பதாகவே தாம் கருதுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவின் அழைப்பின்பேரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இம்மாதம் 1 - 7 ஆம் திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவை சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர் அலி சப்ரி, 

அதனைத்தொடர்ந்து நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: எமது இரு நாடுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதையும், விரிவுபடுத்துவதையும் முன்னிறுத்தி தொடர்ச்சியாக மிகநெருங்கிப் பணியாற்றி வந்திருக்கின்றன.

 இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பானது பரஸ்பர மரியாதை மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. அதுமாத்திரமன்றி ஜனநாயகம், மனித உரிமைகள், திறந்த பொருளாதார செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் என்பனவே எமது இருநாடுகளுக்கு இடையில் விசேட பிணைப்பை உருவாக்கியுள்ளது. அப்பிணைப்பு பரஸ்பர உயர்மட்ட விஜயங்களால் மேலும் வலுவடைந்துள்ளது.

 கடந்த மே மாதம் உங்களது இலங்கை விஜயமும், கடந்த ஆண்டு மே மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயமும் இலங்கை - ஜப்பானுக்கு இடையிலான நல்லுறவை வெளிப்படுத்துகின்றன. எனது இந்த விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா, சிரேஷ்ட அமைச்சரவை செயலாளர் ஹயாஷி யொஷிமஸா மற்றும் நீதியமைச்சர் ஆகியோரை சந்தித்து, பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினேன். இலங்கை கடந்த ஆண்டு தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த தருணத்தில் ஜப்பான் வழங்கிய நிதி உள்ளிட்ட சகல உதவிகள் மற்றும் வெளிக்காட்டிய உடனிற்பு என்பவற்றை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். இலங்கை கடந்த மாதம் 26 ஆம் திகதி முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்களுடன் கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

 உத்தியோகபூர்வ கடன்வழங்குனர்கள் குழுவுக்கு உபதலைமை வகித்த ஜப்பான் எமது வெளியகக் கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி கூறுகின்றோம். எமது பொருளாதார மீட்சியில் ஜப்பான் பரஸ்பர நன்மையளிக்கக்கூடிய முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருப்பதாகவே நாம் கருதுகின்றோம். அடுத்ததாக ஏற்கனவே தீர்மானமாகியிருக்கும் ஜப்பானிய முதலீட்டுத் திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறும் நாம் ஜப்பானுக்கு அழைப்புவிடுக்க விரும்புகின்றோம். அதேபோன்று மின்சாரம், துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதி, பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஜப்பானின் புதிய முதலீடுகளை வரவேற்கின்றோம்.

 ஜைக்கா நிறுவனத்தின் ஊடாக ஜப்பான் இலங்கையின் மிகமுக்கிய அபிவிருத்திப் பங்காளியாகத் திகழ்கின்றது. அதேவேளை தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றில் இலங்கையினால் அடையப்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பொறுத்தமட்டில், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான இடைக்கால செயலகத்தின் இயங்குகை உள்ளடங்கலாக இவ்விடயத்தில் அரசாங்கத்தினால் அண்மையகாலங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவாவுடனான சந்திப்பின்போது விளக்கமளித்தேன்.

 தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு ஜப்பானும் அதன் பாராட்டை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் நாடு என்ற ரீதியில், அவ்வமைப்பை இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கான களமாகப் பயன்படுத்துவதற்கே நாம் முன்னுரிமை அளிக்கின்றோம் எனவும் வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்தேன் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!