இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு தவிர்க்க வேண்டிய பழங்கள்!

#Health #Food
Mayoorikka
1 month ago
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு தவிர்க்க வேண்டிய பழங்கள்!

பழங்களில் இயற்கையான இனிப்பு மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதால் அவை தின்பண்டங்கள், நொறுக்குத்தீனிகள், இனிப்பு பலங்காரங்களுக்கு மாற்றுத்தேர்வாக கருதப்படுகின்றன.

 ஒவ்வொரு பழங்களையும் சாப்பிடுவதற்கு உகந்த நேரம் இருக்கிறது. அதிலும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு சில பழங்களை அறவே தவிர்ப்பது நல்லது.

 சிட்ரஸ் பழங்கள்:

 ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை. இரவில் தூங்குவதற்கு முன்பு அவற்றை உட்கொள்ளும்போது அதிலிருக்கும் அதிகளவிலான அமிலத்தன்மை வயிற்றுக்கு தொந்தரவு கொடுக்கும். செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். அசிடிட்டி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் தூக்கம் சீர்குலைய நேரிடும்.

 அன்னாசி:

 அன்னாசிப்பழத்தில் புரோமலைன் என்ற நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். அன்னாசி பழத்தை அதிகமாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ உட்கொள்ளும்போது இரைப்பை, குடல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்தும். 

தூங்குவதற்கு முன்பு அன்னாசிப்பழம் சாப்பிடுவது செரிமான கோளாறு, வாயுத்தொல்லை, வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அதிலும் புரோமெலைன் நொதி இரைப்பை அமிலத்தின் உற்பத்தியை தூண்டி அஜீரண பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.

 தர்ப்பூசணி:

 தர்ப்பூசணி நீர்ச்சத்து மிகுந்த புத்துணர்ச்சியூட்டும் பழமாகும். அதில் நீர் அதிகம் இருப்பதால் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். தூங்குவதற்கு முன்பு அதனை உட்கொள்வது வயிறு வீக்கம் மற்றும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அதிக அளவில் சாப்பிட்டால், அதிகப்படியான நீர் மற்றும் சர்க்கரையை ஜீரணிக்க உடல் கடுமையாக போராடும். 

அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதால் தூக்கம் தடைபடும். மாம்பழம்: இதில் இயற்கையான சர்க்கரை மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. தூங்குவதற்கு முன்பு மாம்பழம் சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யலாம். 

மேலும் அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதனால் தூக்கமும் தடைபடலாம்.

 வாழைப்பழம்:

 வாழைப்பழங்களில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் இருப்பதால் இரவு தூங்குவதற்கு முன்பு சாப்பிட வேண்டிய சிற்றுண்டியாக பரிந்துரைக்கப்படுகிறது. 

ஆனால் அதிகம் சாப்பிடுவது ஆபத்தானது. நன்கு பழுக்காத பழமாக இருந்தால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இயற்கை சர்க்கரைகள் நிறைந்துள்ளன. 

அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும். உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கும். இருப்பினும், படுக்கைக்கு முன்பு வாழைப்பழங்களை அதிகமாக உட்கொள்வது வயிறு வீக்கம், அசவுகரியத்தை ஏற்படுத்தும்.