போரில் தோற்கிறதா உக்ரைன்?

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 weeks ago
போரில் தோற்கிறதா உக்ரைன்?

உக்ரைன் போர் முனையில் ரஸ்யப் படைகள் மெதுமெதுவாக முன்னேறி வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அதேவேளை, தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்தித்துவரும் உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை இழந்து வருகின்றது. ஆயுத தளபாடங்களுக்கான தட்டுப்பாடு மாத்திரமன்றி, ஆள்பலத்திலும் உக்ரைன் தரப்பில் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஸ்யத் தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கும் நிலையில் உக்ரைன் மேலும் இழப்புக்களை எதிர்கொள்ளும் என்பதைக் கூறுவதற்கு ஆய்வுகள் எதுவும் தேவையில்லை.

ஐந்தாவது தடவையாகப் பதவியேற்றுள்ள ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தனது படைத்துறை அமைச்சரை மாற்றியுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக படைத்துறை அமைச்சராகப் பதவி வகித்துவந்த சேர்கை சொய்கு ரஸ்ய பாதுகாப்புப் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேனாள் துணைத் தலைமை அமைச்சரும் பொருளியலாளருமான அன்ரை பெலூசோ புதிய படைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உக்ரைன் போர்முனையில் ரஸ்யா முன்னேறி வருவதாகச் செய்திகள் வெளிவரும் நிலையில் இடம்பெற்றுள்ள இந்தப் பதவி மாற்றம் உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. படைத்துறை அனுபவம் மிக்க சேர்கை சொய்கு உக்ரைன் களமுனையில் ரஸ்யப் படைகள் கண்ட பல வெற்றிகளுக்குச் சொந்தக்காரர். வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் படையினருக்கு அவரைப் போன்ற ஒருவர் படைத்துறை அமைச்சராக இருப்பது மிகவும் அனுகூலமானது. ஆனாலும் அவர் மாற்றப்பட்டு உள்ளார். ஆகவே, அதன் பின்னால் நிச்சயமாக வலுவான காரணம் இருக்கக் கூடும். அந்தக் காரணம் உக்ரைன் போர்முனையில் செல்வாக்குச் செலுத்தக் கூடும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை இலக்கு வைத்து தனது படை நடவடிக்கைகளை ரஸ்யா விரிவு படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையில் 50,000 வரையான படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வேகமாக முன்னேறும் ரஸ்யப் படைகள் தொடர்ச்சியாகப் பல கிராமங்களைக் கைப்பற்றி வருவதாகவும் தொடர்ச்சியான செய்திகள் வெளியாகி வருகின்றன.

ரஸ்ய எல்லைக்கு மிக அண்மிய நகரமாக கார்கிவ் உள்ளது. 40 கிலோ மீற்றருக்கும் குறைவான தொலைவில் உள்ள இந்த நகரில் இருந்து எல்லையில் இருந்து அதே தொலைவில் உள்ள ரஸ்ய நகரமான பெல்கொரோட் நகரை இலக்கு வைத்து தொடர்ச்சியான தாக்குதல்களை உக்ரைன் படைகள் நடத்தி வருகின்றன. அது மாத்திரமன்றி எல்லையை ஊடறுத்தும் அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இவற்றைத் தடுக்க வேண்டிய நிலையில் ரஸ்யா உள்ளது. எனவே கார்கிவ் நகரை முழுமையாகக் கைப்பற்றாது விட்டாலும், நகரை அண்டிய பகுதிகளையாவது கைப்பற்றி தனது நகர் மீதான தாக்குதல்களை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பது ரஸ்யாவின் கணக்கு.

தற்போதைய படை நடவடிக்கை உண்மையிலேயே கார்கிவ் நகரைத் தம் வசப்படுத்தும் நோக்கிலான ஒரு நடவடிக்கையா அன்றி உக்ரைனின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு, அதன் மூலம் உக்ரைன் படைகளின் செறிவைக் குறைத்து, அவற்றைப் பரவலாக ஆக்கிவிட்டு வேறு எங்காவது கேந்திர முக்கியத்துவமான இடத்தைக் கைப்பற்ற ரஸ்யா முயல்கின்றதா என்ற சந்தேகம் பல்வேறு தரப்புகளிலும் எழுப்பப்படுகின்றது. போரின் ஆரம்பத்தில் ரஸ்யாவினால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதியில் இருந்து ரஸ்யா வெளியேற வேண்டியேற்பட்டதும், அதனை மீளக் கைப்பற்றிக் கொண்ட உக்ரைன் அதனை ஒரு போர் வெற்றியாகக் கொண்டாடித் தீர்த்ததும் உலகம் அறிந்த விடயம்.

தனது பதவியேற்பு உரையின் போது உக்ரைன் போர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த புட்டின் விரைவான வெற்றி தொடர்பில் சுட்டிக் காட்டியிருந்த நிலையிலேயே தற்போதைய நகர்வுகளை நோக்கவேண்டி உள்ளது.

மறுபுறம், உக்ரைன் எக் காலத்திலும் ரஸ்யாவிடம் தோற்றுவிடக் கூடாது என நினைக்கும் மேற்குலகமும், நேட்டோ படைக் கட்டமைப்பும் அடுத்து என்ன செய்யப் போகின்றன என்ற கேள்வி எழுகின்றது. உக்ரைனுக்குத் தேவையான ஆயுத தளபாடங்களையும், பொருண்மிய உதவிகளையும், உளவுத் தகவல்களையும் தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமது படைகளை அனுப்பி வைப்பது தொடர்பிலான விருப்பத்தை அவை வெளியிட்டுள்ளன. முதன்முதலாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் தனது நாட்டுப் படைகளை உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப் போவதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். 

அவரது அறிவிப்பு உள்நாட்டிலும் சரி, அவரது நண்பர்கள் மத்தியிலும் சரி வரவேற்பைப் பெறவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அதன் விளைவு என்னவாகும் என்பதைப் பற்றியே பல தரப்புகளிலும் இருந்து அபாயக் குரல் வெளியானது. பதிலுக்கு, தனது நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணுவாயுதங்களைப் பாவிப்பதற்குக் கூடத் தயங்கமாட்டேன் என புட்டின் விடுத்த அறிவிப்பு நிலைமையின் விபரீதத்தை உணர்த்துவதற்குப் போதுமானது.

அணுவாயுதப் போர் ஒன்று ஏற்படுமானால் ஒட்டுமொத்த மானுட சமூகத்திற்குமே அது அழிவாக அமையும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே, அவ்வாறான ஒன்று நிகழ்வதைத் தடுப்பது ஒவ்வொரு மனிதனதும் கடமையாகின்றது. ஆனால், வல்லாதிக்கக் கனவிலும், மேனாள் காலனித்துவ மனோபாவத்திலும் இன்னமும் இருந்துவரும் சில நாடுகளின் தலைவர்களுக்கு அது புரியுமா என்பதே கேள்வி.

உக்ரைனில் நிலவும் படையினரின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய என்னதான் வழி?

தற்போதைய நிலையில் கட்டாய ஆட்சேர்ப்பு என்ற ஒரு நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்துள்ளதாகத் தெரிகின்றது. படையில் சேர்வதற்கான வயதெல்லையைக் குறைப்பது, பெண்களைப் படையில் சேர்ப்பது, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்களைப் படையில் சேர்ப்பது, வெளிநாடுகளில் அகதிகளாகச் சென்று தங்கியிருப்போரில் போரிடக் கூடிய ஆற்றல் உள்ளோரை மீண்டும் நாட்டுக்கு வரவழைப்பது, சிறையில் உள்ள கைதிகளைப் படையில் இணைப்பது எனப் பல வழிகளில் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க உக்ரைன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதேவேளை, அரசாங்கத்தின் இத்தகைய முயற்சிகள் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், அரசாங்கம் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்து வருகின்றது.

தனது படைத்துறைத் தலைமையை மாற்றிய உக்ரைன் அரசுத் தலைவர் செலன்ஸ்கி புதிய ஒருவரைப் பதவியில் அமர்த்தினாலும் பிரச்சனைக்குத் தீர்வு கிட்டியபாடில்லை.

அது மாத்திரமன்றி, ஊழலில் சிக்கித் தவிக்கும் உக்ரைனில் பாரிய அளவில் நிதி செலவிடப்பட்டு களமுனையில் தடுப்புக் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி இருந்தாலும், அத்தகைய கட்டுமானங்கள் எதுவும் முறையாக, பலமாக மேற்கொள்ளப்படவில்லை என மேற்குலக ஊடகங்களே சுட்டிக்காட்டும் வகையில் ரஸ்யப் படைகள் இலகுவாக முன்னேறி வருவதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இத்தகைய பின்னணியில், உக்ரைனுக்கு வருகை தந்த அமெரிக்க வெளியுறவுச் செயலர் அன்ரனி பிளிங்கன் அமெரிக்க உதவிகள் விரைவில் கிடைக்கும் என்வும் அதன் பின்னர் கள நிலவரத்தில் மாற்றம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனை தனியே ஆயுத தளபாடங்களின் பற்றாக்குறை அல்ல. மாறாக, போரிடுவதற்கு, ரஸ்யப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான படையினரைக் கண்டு பிடிப்பதே. போரிடுவதற்கு ஆளில்லாத களத்தில் வெற்றியை எவ்வாறு பெற முடியும் என்பதே பெறுமதியான கேள்வி.

நன்றி - சுவிஸில் இருந்து சண்தவராஜா