முருகன், றொபேட் பயஸ், ஜெயக்குமார் விடுதலை இந்திய தேர்தல் அரசியலுக்கு சாதகமா?

#India #SriLanka #Tamil Nadu
Mayoorikka
3 weeks ago
முருகன், றொபேட் பயஸ், ஜெயக்குமார் விடுதலை இந்திய தேர்தல் அரசியலுக்கு சாதகமா?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானோர் நாட்டுக்கு அனுப்பப்பட்டதன் பின்னணியில் தமிழக மற்றும் இந்திய தேர்தல் அரசியல் பின்னணி இருப்பதாகவே உணரப்படுகின்றது.

 ராஜீவகாந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் சாந்தன் பேரழிவாளன் நளினி உட்பட ஏழு பேருக்கும் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்து நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசாங்கம் பேரறிவாளன் நளினியை தவிர மீதி நான்கு போரையும் திருச்சி சிறப்பு முகாமில் மீண்டும் அடைத்து வைத்திருந்தது. 

 இவர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டாலும் இவர்கள் வெளி நாட்டினர் என்பதால் இவர்கள் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் கடந்த ஒன்றரை வருடங்களாக இருந்துள்ளனர். இந்தநிலையில் அண்மையில் சாந்தன் உடல் நலக் கோளாறு காரணமாக தாய் நாட்டையும் தாயையும் பார்க்காமல் உயிர் பிரிந்தார். உயிரற்ற உடலாக தாய் மண்ணை வந்தடைந்தார். இந்த நிலையில் மீதி மூன்று பேரையும் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் அவர்கள் சொந்த மண்ணில் உறவினர்களுடன் இணைய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்றன.

 இதனையடுத்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஆவணங்களையும் இலங்கை தூதரகம் வழங்கிய நிலையிலும் இந்திய மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் தாமதப்படுத்தயே வந்தன. 

 இந்த நிலையில் மீதி மூவரின் விடுதலைக்காக தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தமிழக அரசாங்கத்தோடு கலந்துரையாடலை மேற்கொண்ட நிலையில் நேற்றைய தினம் மீதி மூவரான முருகன், றொபேட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையை வந்தடைந்தனர். 

 இந்த நிலையில் இவர்களின் திடீர் விடுதலையில் அரசியல் பின்னணி இருப்பதாகவே பலர் உணர்கின்றனர். இந்திய பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களின் விடுதலைக்காக பல உயிர்த் தியாகங்களும் இடம்பெற்ற நிலையில் அதாவது செங்கொடியில் இருந்து சாந்தன் வரை உயிர்த்தியாகம் செய்திருந்தமை யாவரும் அறிந்த உண்மை. இந்த நிலையிலும் கூட அசையாத இந்திய அரசு தற்பொழுது இவர்களை விடுதலை செய்ததன் சூட்சுமம் தான் என்ன? என்று கேள்வி எழுப்பப்படும் நிலையில் எல்லாம் வாக்கு அரசியல் தான் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 தமிழக அரசும் இந்திய மத்திய அரசும் இணைந்து இவர்களின் விடுதலையை வைத்து அரசியல் காய்நகர்தலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றன. இதனால் இவர்களுக்கு சாதகமா அல்லது பாதகமான விளைவுகளா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆக மொத்தத்தில் இவர்கள் 33 ஆண்டுகளின் பின்னர் தாயகத்தினை வந்தடைந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமே. 

இவர்கள் தாயகம் திரும்பும் நிலையிலும் கூட இவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்படலாம் என பல எண்ணியிருந்தனர். ஆனால் இவர்கள் இலங்கை விமான நிலையத்தில் மிக நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

 எது எவ்வாறாக இருந்தாலும் இவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். இனியாவது இவர்களது தனிப்பட்ட சமூக வாழ்வில் எந்த விசாரணைகளும் தொந்தரவுகளும் இல்லாமல் பார்த்துக் கொள்வது தமிழ் அரசியல்வாதிகளினதும் கடமையாகும். இவர்களும் இந்திய அரசாங்கங்கள் போல் வெறும் வாக்குகளுக்காக மட்டும் இவர்களை அணுகாமல் இவர்களின் நலனில் அக்கறைப்பட்டு செயற்படுவதும் தமிழ் அரசியல்வாதிகளின் கடமையும் பொறுப்பும் கூட.