அபுதாபி இந்து கோவிலில் கொண்டாடப்பட்ட இப்தார் விருந்து நிகழ்ச்சி

#Hindu #Temple #Muslim #iftar #AbuDhabi
Prasu
1 month ago
அபுதாபி இந்து கோவிலில் கொண்டாடப்பட்ட இப்தார் விருந்து நிகழ்ச்சி

அபுதாபி இந்து கோவிலில் முதல் முறையாக சைவ உணவுடன் கூடிய இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது. 

இதில் அமீரக மந்திரிகள், யூத குருமார்கள் மற்றும் சீக்கியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.அபுதாபி-துபாய் நெடுஞ்சாலையில் உள்ள முரைக்கா பகுதியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை கடந்த பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 

குஜராத்தை சேர்ந்த பி.ஏ.பி.எஸ். அமைப்பு இந்த கோவிலை நிர்வகிக்கிறது. தற்போது ரமலான் மாதம் நடந்து வருவதால் முதல் முறையாக இப்தார் நிகழ்ச்சிக்கு அபுதாபி இந்து கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

மதநல்லிணக்கம், சகோதரத்துவத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க கோவில் வளாகத்துக்கு வந்த அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், அமீரக வெளிநாட்டு வர்த்தகத்துறையின் ராஜாங்க மந்திரி டாக்டர் தானி பின் அகமது அல் ஜையூதி, சமூக வளர்த்துறையின் தலைவர் டாக்டர் முகீர் காமிஸ் அல் கைலி ஆகியோரை பி.ஏ.பி.எஸ். அபுதாபி இந்து கோவிலின் தலைமை குரு சுவாமி பிரம்மவிஹாரிதாஸ் கட்டித்தழுவி வரவேற்றார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் யூத குருமார்கள், சீக்கியர்கள், அரசுத்துறை தலைவர்கள், தூதர்கள், தூதரக அதிகாரிகள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

 ஓம்சியத் என்ற தலைப்பில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் இந்து கோவிலின் தன்னார்வலர்கள் தயாரித்த சைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டது. தொடர்ந்து அந்த வளாகத்தில் அதிகாலையில் நோன்பு வைப்பதற்கு முன் உண்ணப்படும் சஹர் உணவும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.