IPL - பெங்களூருவை வீழ்த்தி லக்னோ வெற்றி

#India #IPL #T20 #Cricket #Lucknow #Bengaluru
Prasu
1 month ago
IPL - பெங்களூருவை வீழ்த்தி லக்னோ வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில் இன்று நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளிஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், கே.எல்.ராகுல் களமிறங்கினர். 

இதில் கே.எல்.ராகுல் 20 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து படிக்கல் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்டாய்னிஸ் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபுறம் தொடக்க வீரர் டி காக் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார். பின்னர் 56 பந்துகளில் 81 ரன்களுக்கு டி காக் ஆட்டமிழந்தார். 

கடைசியில் நிக்கோலஸ் பூரன் சிக்சர்களை பறக்க விட்டார். அவர் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 181 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட், யாஷ் தயால் , சிராஜ் , டாப் லீ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். 

இதில் டு பிளிஸ்சிஸ் 19 ரன்களில் ரன் அவுட் ஆன நிலையில், விராட் கோலி 22 ரன்களில் கேட்ச் ஆனார். ரஜத் படிதார் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கிளென் மாக்ஸ்வெல்(0), கேமரோன் கிரீன்(9), அனுஜ் ராவத்(11) ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனிடையே மகிபால் லாம்ரோர் 13 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை பறக்கவிட்டு ஆதிரடி காட்டிய நிலையில், 33 ரன்களில் கேட்ச் ஆனார். 

முகமது சிராஜ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளையும், நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகளையும், மணிமாறன் சித்தார்த், யஷ் தாக்கூர் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.