இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் - ரணில்!

இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை ஈடுசெய்யும் வகையில் கடன் வாங்கும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கி அதனை விரைவாக ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவது தனது நம்பிக்கை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் புதிய சட்டமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு அரசாங்கத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்கான சட்டமும் கொண்டுவரப்படும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
கேகாலையில் இன்று (20.03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடனை செலுத்தும் நாடாக இலங்கையை உறுதிப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையுடன் வர்த்தகம் செய்வதிலிருந்து விலகியிருந்த வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பிக்கப்படுவதன் மூலம் நாட்டின் நாணய அதிகரிப்பினால் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்.
பொருளாதாரத்தின் பலன்கள் ஒரு சிலருக்கு மாத்திரமன்றி அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும். தற்போது ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றுள்ளது.
ஜூன் மாதத்திற்குள் ஒரு டொலரின் விலை 280 ரூபாயாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, பொருட்களின் விலை குறையும். அடுத்த ஆண்டுக்குள் ரூபாயின் மதிப்பு இன்னும் வலுவடையும் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.



