வெடுக்குநாறிமலை வன்முறைக்கு நீதிகோரி நெடுங்கேணியில் ஆர்பாட்ட பேரணி!

நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த மகாசிவராத்தி தினத்தன்று இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,கைதுசெய்யப்பட்ட அப்பாவிகளுக்கு நீதிகோரியும் இன்று ஆர்பாட்டபேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நெடுங்கேணிசந்தியில் ஆரம்பமாகியகுறித்த ஆர்பாட்டபேரணி வவுனியா வடக்கு பிரதேசசெயலகத்தினை அடைந்தது.அங்கு உதவிப்பிரதேச செயலாளருக்கு மகஜயர் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்துஅங்கிருந்து நெடுங்கேணி பொலிஸ்நிலையம் வரை பேரணியாக சென்றதுடன் பொலிஸ்நிலையத்தின் முன்பாக ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தபோது…
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. தொல்லியல் திணைக்களமும், பொலிஸாரும் இணைந்து இவ்வாலயத்தில் இடம்பெறும் வழிபாடுகளுக்குப் பல்வேறு விதமாகத் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். நீதிமன்ற அனுமதியின்படி வழிபாடுகளில் ஈடுபடக்கூட தடையேற்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த சிவராத்திரி தினத்தன்று ஆலயச் சூழலில் சிவபக்தர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட வன்முறையும், அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற கைதுகளும், சிறைப்படுத்தல்களும் தமிழ் மக்களாகிய எமது மனங்களை வேதனைப்படுத்துகின்றன. தமிழ் மக்களின் வழிபாட்டு மரபையும், வழிபாடுகளையும் அவமானத்திற்குள்ளாக்கியுள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள மதவழிப்பாட்டுச் சுதந்திரமானது வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழிபாட்டு விடயத்தில் முற்றாக மீறப்பட்டுள்ளது.
ஆலயத்தில் வழிபாடு செய்ய முயற்சிக்கும் போதெல்லாம் விசாரணைகளும், கைதுகளும் மாத்திரமே தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. எனவே எங்கள் மீது ஏவப்படும் மத வழிபாட்டு உரிமை மீறலை சர்வதேச சமூகம் கண்டிப்பதோடு, சிவராத்திரி வழிபாட்டின்போது கைதுசெய்யப்பட்ட எட்டுப்பேரையும் விரைந்து விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கின்றோம். என்றனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது நிலம் எமக்குஙேண்டும்,வழிபாட்டுரிமையை உறுதிசெய், கைதுசைய்தவர்களை விடுதலைசெய், வரலாற்றுமரபுரிமையை சிதைக்காதே போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
ஆர்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பொதுஅமைப்புக்கள்,பொதுமக்கள், வேலன்சுவாமிகள், தவத்திரு அகத்தியர் அடிகளார், அருட்தந்தை ரமேஸ் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.



