தேசிய மக்கள் படைக்கும், IMF இன் இலங்கைக்கான செயற்பாட்டு தலைவருக்கும் இடையில் கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்பாட்டுத் தலைவர் பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட குழுவினருக்கும் தேசிய மக்கள் படையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (14.03) காலை கொழும்பு ஸ்ரங்கிலா ஹோட்டலில் இடம்பெற்றது.
சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முன்னேற்றம் மற்றும் மோசடி, ஊழலை தடுப்பது தொடர்பான செயல்முறைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக அறிய முடிகிறது.
இதன்போது தேசிய மக்கள் படையின் பிரதிநிதிகள் தொழில்நுட்ப ஆதரவு குறித்தும் கேட்டறிந்தனர்.
இக்கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பீற்றர் ப்ரூவருக்கு மேலதிகமாக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சர்வத் ஜஹான், கட்சியரினா ஸ்விட்செங்கா மற்றும் மானவி அபேவிக்ரம ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தேசிய செயற்குழு உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய செயற்குழு உறுப்பினர் முதித நாணயக்கார மற்றும் பொருளாதார சபை உறுப்பினர்களான பேராசிரியர் அனில் ஜயந்த, பேராசிரியர் சீதா பண்டார, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.



