திருகோவிலில் மரதன் ஒட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் மரணம் : போராட்டம் முன்னெடுப்பு!

திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் பொதுமக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று (11.03) காலை விளையாட்டு போட்டியின் போது மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் திடிரென மயக்கமுற்ற நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யபட்ட நிலையில் அங்கு அம்மாணவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் மரணமடைந்த மாணவனுக்கு சிகிச்சை அளிக்க தவறிய திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி மாணவனின் மரணத்திற்கு வைத்தியர்களின் அலட்சிய நிலையே காரணம் என தெரிவித்து நீதி கோரி போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்த மாணவன் எந்தவொரு சிகிச்சையுமின்றி மூன்று மணித்தியாலயத்தின் பின் மரணம் அடைந்ததாக சுட்டிக்காட்டினர்.
மேலும் இச்சம்பவத்தில் திருக்கோவிலை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க ஜெயக்குமார் விதுர்ஜன் எனும் மாணவனே உயிரிழந்தவராவார்.
சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதுடன் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அருகில் மரணமடைந்த மாணவனுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



