ஈழப்போரில் தமிழனை கொலை செய்து சாகசம் காட்டிய விமானங்கள் முற்ற வெளியில் சாகசம்!

#SriLanka #Jaffna #Air Force
Mayoorikka
1 month ago
ஈழப்போரில் தமிழனை கொலை செய்து சாகசம் காட்டிய விமானங்கள் முற்ற வெளியில் சாகசம்!

சிறீலங்கா விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் நல்லிணக்க செயற்பாட்டில் “நட்பின் சிறகுகள்”என்ற தொனிப்பொருளில் 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை விமானப்படை முன்னெடுக்கின்றது. 

அதில் ஒன்றுதான் யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்ற படையினரின் எயார் டாட்டு 2024 என்ற பெயரில் இடம்பெற்ற கல்வி மற்றும் தொழில்நுட்ப சாகசக் கண்காட்சி. கடந்த ஆறாந் திகதியிலிருந்து பத்தாம் திகதி நேற்று வரையிலும் யாழ் முற்ற வெளியில் இடம்பெற்றது. இக்கண்காட்சியில் விமானப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்களும் வான சாகசங்களும் இசை கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. 

அது ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி என்ற அடிப்படையில் பாடசாலைப் பிள்ளைகள் இதில் உள்வாங்கப்பட்டிருந்தார்கள். விமானங்களின் இயக்கங்கள் தொடர்பாக மாணவர்கள் விளக்கம் கொடுத்திருந்தார்கள். அத்தோடு மாணவர்களுக்கு சிறிது நேரம் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வாய்ப்பும் வழங்கப்பட்டது. 

 இதில் மாணவர்கள் மாத்திரமன்றி பொதுமக்களான இளைஞர்கள் யுவதிகள் வயது வந்தவர்கள் என பலரும் ஏறி யாழ்ப்பாணத்தினை ஹெலிஹொப்டரில் இருந்து சுற்றிப் பார்த்தனர். 

பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகத் தான் இருந்தது. இருந்தும் இவை அனைத்தும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு காய்நகர்த்தப்படும் செயற்பாடுகளே அன்றி தமிழ் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பாடத்தினை புகுத்தும் அக்கறையான செயற்பாடுகளாக ஈழத் தமிழர்களாக எங்களால் பார்க்கக் முடியாது. அதுவும் ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை மாநாடு நடக்கும் பங்குனி மாதத்தில் உலகத்தினருக்கு தமிழ் மக்களோடு நல்லிணக்கத்தினை காட்டிக் கொள்வதற்கு வெறும் பகட்டுக்காக காட்டபப்டும் வேடிக்கைகளே தவிர உண்மையான அபிவிருத்தி செயற்பாடுகளாக பார்க்க முடியாது.

 மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற ஈழப்போராட்ட வரலாற்றில் எப்பேற்பட்ட வான சாகசங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ்மக்கள் மீது காட்டியிருக்கின்றமையை ஈழத்தமிழர் மறந்திருப்பதுதான் வேடிக்கைக்குரிய விடயமாக அமைந்துள்ளது.

 பாடசாலைகள் வைத்தியசாலைகள் வீட்டுத்தொகுதிகளில் குண்டு மழை பொழிந்து சாகசம் காட்டிய வீரர்கள் இன்று யாழ் முற்றவெளியில் காட்டிய சாகசம் ஒன்றும் பெரிய வேடிக்கையான வினோதமான செயற்பாடுகள் அல்ல. 

அதை எமது அடுத்த சந்ததியினர், மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் உங்களுடைய பெற்றோர்கள் இன்று சாகசம் புரிந்த விமானங்களினால் எவ்வளவு துன்பங்கள் வேதனைகள் மனவுளைச்சலை சந்தித்து வந்தவர்கள் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். 

நீங்கள் விமானம் தொடர்பாகவோ அல்லது விமானியாகவோ வருவதற்கு இங்கு யாரும் தடை சொல்லவில்லை. அவற்றையெல்லாம் கற்பதற்கு முன்னர் இவ்வாறான விமனங்கள் மூலம் எமது பெற்றோர்களுக்கு எமது முதாதையர்களுக்கு என்ன நடந்தது என்பதனை தெரிந்து ஆவது வைத்துக்கொள்ளுங்கள். 

எங்களிடமும் மிகச் சிறந்த விமானங்கள் இருந்தன. அதற்கு மிகச் சிறந்த விமானிகளும் இருந்தார்கள் அவர்களையும் இவர்கள் கொன்று குவித்த சாகசத்தை யாரும் மறந்துவிடக் கூடாது.

 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களுக்கு வானம் ஒரு மரண மழை பெய்யும் வெளியாக இருந்தது அண்ணார்ந்து பார்த்தால் வகை வகையான விமானங்கள் குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கும். 

மக்கள் வெள்ளம் திக்குத் திசை தெரியாமல் ஓடி ஒளிந்துகொண்டு இருந்தார்கள். வானிலே குண்டுமழை வீசும் போர் விமானங்கள் வட்டமிடும் போது பிள்ளைகளின் பெற்றோரும் பெற்றோரின் பெற்றோரும் பதுங்கு குழிகளுக்குள் ஓடி ஒளித்தார்கள். 

சிலருக்கு பதுங்கு குழியே புதை குழி யாகவும் மாறியது. அவ்ரோ ரக விமானங்களில் இருந்து தொடங்கி சியா மாசற்றி, அன்ரனோவ்; புக்காரா; கிபிர்; சூப்பர்சோனிக்; மிக்; முதலாய் என உலகத்தின் அனைத்து விமானங்களும் சிறிலங்கா அரசாங்கம் சார்பாக ஈழத் தமிழனின் தலைகளை பதம்பார்த்துக்கொண்டிருந்தன.

 சில  சகடை ரக விமானங்களில் குண்டுகளுக்கு பதிலாக மனித மலங்களையும் தமிழ் மக்கள் மீது வீசினார்கள். எந்தவொரு நாட்டிலும் யுத்தத்தில் இல்லாத ஈனச் செயல்களினை அந்தக் காலகட்டங்களில் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது திணித்தனர்.

 சீனாவின் சகடை இந்த விமானம் மெதுமெதுவாக மிக உயரத்தில் பறந்து போகும் அந்த விமானத்திலிருந்து எவ்வளவு பெரிய குண்டைப் போட முடியுமோ அவ்வளவு பெரிய குண்டு போடப்பட்டது. அவ்வாறுதான் சுப்பசொனிக் இந்தியாவின் சீப் பிளேன் உள்ளடங்களாக தமிழர்களின் பாடசாலைகள் வைத்தியசாலைகள், மைதானங்கள் கோயில்கள்,தேவாலயங்கள் பங்கர்கள் என அனைத்து பிரதேசங்களிலும் குண்டுகளை வீசி சாகசம் செய்துகொண்டிருந்தன. ஈழப் போரின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகளின் போது மிக நவீன குண்டு வீச்சு விமானங்கள் அரங்கினுள் பிரவேசித்தன.

அவை காற்றையும் வானத்தையும் கிழித்துக்கொண்டு குத்தி பறந்து குண்டுகளை வீசின. இதில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். உடல் உறுப்புகளை இழந்தார்கள். சொத்துக்களை இழந்தார்கள்.

 குண்டு வீச்சு விமானங்கள் மட்டுமல்ல, கண்காணிப்பு விமானங்கள் அதாவது வேவு விமானங்களும் தமிழ் மக்களின் இரவுகளையும் பகல்களையும் கழுகுப் பார்வை பார்த்தன. இறுதி யுத்தத்தின் போதும் வானில் வேவு விமானங்கள் நிரந்தரமாக ரீங்காரமிட்டபடி பறந்தன.

 யுத்த காலங்களில் வேவு விமானங்களின் ஒலி காதுகளில் நிரந்தரமாக உறைந்து நின்றது. இறுதி கட்டப் போரின் இறுதி நாளுக்கு பின்னரும் அது கேட்டது. ஏன் தற்பொழுதும் அதன் பாதிப்பை பலர் உணர்கின்றார்கள். தமிழர்களைக் கொன்று குவிக்கப் யன்படுத்தப்பட்ட அதே தொழிநுட்பம் இப்பொழுது முற்ற வெளியில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றது.ஒரு காலம் தமிழ் மக்களைக் கொல்லும் கருவிகளாக காணப்பட்டவை இப்பொழுது கண்காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.

 இதுவும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் பெரும்பாண்மையினர் அல்லது யுத்தத்தில் வெற்றியீட்டியவர்கள் போருக்கு பின்னரான காலகட்டங்களில் மாற்றப்படும் நல்லிணக்க உத்திகளாக அமைகின்றன. அவை ஒரு மாற்றமாகவும் பார்க்கப்படுகின்றது. 

 அவ்வாறே யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ஏனைய பொருட்களும் இடங்களும் காட்சிப் பொருள்களாக மாறுவது யுத்தத்தின் பின்னரான செயற்பாடு.

 ஆனால் முற்றவெளியில் நடப்பது என்ன? ஒரு காலம் தமிழ் மக்களின் தலைகளின் மீது மலத்தைக் கொட்டிய கொலைக் கருவிகளும் கொலை வாகனங்களும் இப்பொழுது முற்ற வெளியில் காட்சிப் பொருட்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. 

அதை தற்பொழுது திரண்டு சென்று வேடிக்கை வினோதமாக பார்க்கின்றனர். செய்தி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் அதை பரப்பிக் கொண்டு தாங்கள் இலாபம் பெற முயற்சிக்கின்றனர். 

இதை பரப்பும் ஊடகங்களும் கூட அதன் தாக்கங்களினை தற்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு புரிய வைக்கவோ விளங்கப்படுத்தவோ முன்வருவதில்லை. அதை யாரும் செய்யவும் இல்லை. ஒரு இனத்தினை ஒடுக்கி அழித்து விட்டு அந்த தொழிநுட்பத்தினையே அதே இனத்தின் இளைய சமுதாயத்தினருக்கு காட்சிப் பொருளாக காட்டுவது மேன்மை வாத்தின் சிந்தனைகள்தான். 

அதையே ஒடுக்கப்பட்ட அந்த சமுதாயம் புரிந்துகொண்டு செயற்படுவதுதான் காலத்தின் தேவையாக அமைந்துள்ளது. ஒரு இன ஒடுக்குமுறையின் விளைவுதான் போர். அண்மையில் கூட ஐக்கியநாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணையாளர் இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் கவலையளிக்கின்றன என அறிக்கையிட்டுள்ளார்.

 இந்தநிலையில் தான் தற்பொழுது நல்லிணக்க செயற்பாடுகளாக இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் கண்காட்சிகள் அமைகின்றன. இந்த வருட மகளிர் தினத்தில் கூட கிளிநொச்சி வைத்தியசாலைகளில் இராணுவத்தினரால் தாய்மாருக்கு அதாவது குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன. 

ஆனால் யுத்தத்தில் அதே வைத்தியசாலைக்கு அதே இராணுவத்தினர் தான் கர்ப்பிணிகள் குழந்தை பெற்ற தாய்மார்கள் என குண்டு வீசி கொலை செய்தார்கள். ஆனால் தற்பொழுது அவர்களையே நல்லவர்களாக காட்டிக் கொள்வதற்கும் உலகத்தினை ஏமாற்றுவதற்காகவும் இவ்வாறு உதவிகள் வழங்கி வைக்கப்படுகின்றன. இதை எங்களுடைய சமூகம் தான் புரிந்துகொள்ள வேண்டும்.

 தமிழ் மக்களினைப் பொறுத்தவரை கடந்துவந்த பாதைகளை மறந்து தற்பொழுது களியாட்டங்களுக்கும் வேடிக்கை விநோதங்களுக்கும் இசைந்து கொடுத்து யார் எங்கு என்ன செய்தாலும் என்ன நிகழ்வு நடந்தாலும் அதன் தாக்கங்கள் புரியாமல் முந்தியடித்துக் கொண்டு திரண்டு செல்கின்றனர். 

இது ஓர் ஆரோக்கியமான சமூகத்திற்கு நல்லதல்ல என கல்வியாலளர்கள் கூறுகின்றார்கள். ஆகவே ஒரு யுத்தம் நடைபெற்ற நாட்டில் யுத்தத்தின் பின்னர் இவ்வாறான நல்லிணக்க செயற்பாடுகள் அமைவது வழமையாக இருந்தாலும் நாங்கள் வெறுமனே அதை நல்லிணக்கம் என கூறிக்கொண்டு கடந்து செல்ல முடியாது. 

அடுத்த தலைமுறையினருக்கும் அதன் வலியையும் தாக்கத்தினையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் அவர்களுக்கும் அதை கடத்த வேண்டும். இவர்களுக்காக தான் 50 ஆயிரம் இளைஞர்கள் தமது உயிர்களை தியாகம் செய்திருக்கின்றார்கள். 

அந்த தியாகத்திற்கு எமது தற்போதைய இளைய சமூகமும் மாணவர்களும் உண்மையுடையவர்களுக்காவும் பொறுப்புடையவர்களாகவும் இருந்து எங்களுடைய சமூகத்தினை எவ்வாறு ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என்பதனை சிந்தித்து செயற்படுத்த வேண்டிய பொறுப்பு இளையோர்கள் கைகளிலே உள்ளது. 

 இதை வெறுமனே ஈழத்தில் உள்ள இளைஞர்கள் மாத்திரம் கடைப்பிடிக்காமல் வெளிநாடுகளில் வாழும் இளைஞர்களும் தமிழர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்ட யுத்தத்தின் வலியினையும் அதன் தாக்கங்களினை புரிந்து கொண்டு ஈழத்தில் ஒரு பெறுமதி மிக்க சமுதாயத்தினை கட்டியெழுப்ப முன்வரவேண்டும்.