வாபஸ் பெறப்பட்ட போராட்டம் பத்து நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள்!

மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ் பெற்று பத்து நாட்களுக்கு பின் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இதனால் 10 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட மீன் பிடித்து துறைமுகம் இன்று உற்சாகத்துடன் காணப்பட்டது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை வெளிக்கடை சிறையில் உள்ள ஐந்து ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டர் மற்றும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மீனவர்களின் உண்ணாவிரத போராட்ட பத்தலுக்கு வந்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததுடன், விரைவில் தமிழக முதல்வரை மீனவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததின் பேரில் மீனவர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டம் மற்றும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
இதனையடுத்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று ராமேஸ்வரம் மீனவர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த 10 நாட்களாக ராமேஸ்வரம் மீன் பிடிதுறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டிருந்த நிலையில் இன்று மீனவர்கள் மீன் பிடிக்க சென்றதால் மீண்டும் உற்சாகத்துடன் காணப்பட்டது.



