வற் வரியினால் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன்! கொள்கைப் பிரகடன உரையில் ரணில்

#SriLanka #Sri Lanka President #Parliament #taxes #Ranil wickremesinghe #speaker #Vat
Mayoorikka
1 year ago
வற் வரியினால் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதை  ஏற்றுக்கொள்கிறேன்! கொள்கைப் பிரகடன உரையில் ரணில்

வற் வரியினால் சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன் எனவும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்ய விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் வெகுவிரைவில் வரிக் கொள்கை திருத்தம் செய்யப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையுடன் மிக எளிமையான முறையில் இன்று புதன்கிழமை ஆரம்பமானது.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் வரவேற்றனர். இதன் பின்னர் கொள்கை பிரகடன உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

 2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% என்ற நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை, 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உபரி நிலைய அடைய முடிந்தது. 2021 ஆம் ஆண்டில் 194,495 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை 2023 ஆம் ஆண்டில் 1,487,303 ஆக உயர்த்த முடிந்ததாகவும், இந்த ஆண்டு ஜனவரியில் மாத்திரம் 200,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 வருடாந்தம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 5 மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டில் வரி செலுத்துவதற்கு பதிவு செய்தோர் தொகை 437,547 ஆக இருந்ததோடு 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அதனை 1,000,029 ஆக அதிகரித்துள்ளதாகவும், இது 130% அதிகரிப்பைக் காட்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டு முழுதும் சரிந்த பொருளாதாரம் 2023 இல் முன்னேற்றத்தை அடைந்திருப்பது தற்செயலாக அல்ல. 

மிகவும் கவனமாகவும் தொலைநோக்குடனும் தயாரிக்கப்பட்ட நுட்பமான பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தியன் மூலமே அந்த நிலை ஏற்பட்டது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 தற்போது நடைமுறையில் உள்ள ஊழல் ஒழிப்பு சட்டம் போன்ற சட்டங்களை அமுல்படுத்தும் போது அரசியல் அல்லது வேறு எந்த அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என்பது நாட்டின் முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் கையகப்படுத்தப்பட்ட பல இலட்சம் ஏக்கர் காணிகளிலிருந்து உயர்ந்தபட்ச உற்பத்தியைப் பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வீணாகும் காணிகளை அந்நிய செலாவணி மூலங்களாக மாற்றி பொருளாதார அபிவிருத்தியை வலுப்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 வங்குரோத்து நிலை அறிவிக்கப்படும் போது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு பூச்சியமாக காணப்பட்டது. 2023 ஆண்டு இறுதிப் பகுதியில் வெளிநாட்டு கையிருப்பு 4.4 பில்லியன் டொலராக உயர்வடைந்துள்ளது.

 இதேவேளை, நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்தில் மீட்சியடைந்துள்ளமை உலக சாதனையாகும். பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையாக அறிவித்துள்ளேன். எந்தத் திட்டங்களையும் நான் மறைக்கவில்லை.

 நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த போது நான் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கி கடுமையான தீர்மானங்களை எடுத்து அவற்றை உறுதியாக செயற்படுத்தியுள்ளேன். பொருளாதார நெருக்கடியினால் நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் உரிமை மற்றும் வரபிரசாதங்கள் மீறப்பட்டுள்ளன. 

 இழக்கப்பட்ட உரிமைகளை கட்டம் கட்டமாக மீளப்பெற்றுக்கொடுப்பேன். குறைந்த வருமானம் பெறும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் 20 கிலோகிராம் அரிசி வழங்கப்படும். வற் வரியினால் சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன். நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்ய விசேட கவனம் செலுத்தப்படும். வெகுவிரைவில் வரிக் கொள்கை திருத்தம் செய்யப்படும்.

 வெளிநாட்டு அரசமுறை கடன் மறுசீரமைப்பு பணிகள் எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும்.

 வெளிநாட்டு கடன் மறுசீரமைக்கப்பட்டவுடன் தெரிவு செய்யப்பட்ட அரச முறை கடன்களை செலுத்த வேண்டும், அதற்கு வருடாந்தம் 3 பில்லியன் டொலர்களை ஒதுக்க வேண்டும். கல்வி மற்றும் சுகாதார சேவைத்துறையின் சட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் திருத்தம் செய்யப்படும்.

 பிளவுபடாத வெளிவிவகார கொள்கை விரிவுபடுத்தப்படும். சீனா, இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளோம்.

 அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நிலையான முன்னேற்றத்தை அடையலாம். பொருளாதார மீட்சிக்கான செயற்திட்ட பேச்சுவார்த்தைக்கு ஒன்றிணைய அனைவரும் தயாரெனில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளை நாட்டுக்கு அழைக்கத் தயார் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!