பாடசாலைகளைச் சுற்றி போதைப்பொருள் வியாபாரம் : 517 பேர் கைது!

பாடசாலைகளைச் சுற்றி போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட 4,983 பாடசாலைகளில் 4,876 பாடசாலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அந்தந்த பள்ளிகளைச் சுற்றி போதைப் பொருள் விற்பனை செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 517 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பிரகாரம், போதைப்பொருள் உள்ளதாக இனங்காணப்பட்ட ஒவ்வொரு பாடசாலை தொடர்பாகவும் அந்தந்த பாடசாலை ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் பாடசாலைகளைச் சுற்றியுள்ள மாணவர் சமூகத்தின் பங்களிப்புடன் 5,133 குழுக்கள் உருவாக்கப்பட்டன.
குறித்த குழுவினர் அளித்த அறிக்கையின்படி, 4876 பள்ளிகள் தொடர்பாக போதைப்பொருள் அபாயம் ஓரளவு குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அத்துடன் 107 பாடசாலைகள் தொடர்பில் போதைப்பொருள் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளதுடன், பாடசாலைகள் அமைந்துள்ள பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேலும், 434 பாடசாலைகள் சிறுவர்களை வழிதவறச் செய்யும் இடங்களைக் கொண்டிருப்பதாக இனங்காணப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் அந்தப் பாடசாலைகளைச் சுற்றி செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அந்தந்தப் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.



