புதிய சட்டங்கள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினை ஒடுக்குகின்றன : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்!

அரசாங்கம் பல்வேறு புதிய சட்டங்கள் ஊடாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய குடியேற்றங்கள், நிலங்களை கைப்பற்றி விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகளாகள் என இவை தொடர்கின்றன என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி, மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், காணாமல் போனோர் அலுவலகம் (OMP) மற்றும் அரசாங்கத்தின் புதிய உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆணைக்குழு (TURC) என்பன தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே எனத் தெரிவித்துள்ளார்.
“14 வருடங்களாக நாங்கள் எமது போராட்டத்தை முன்னெடுகத்துக்கொண்டிருக்கின்றோம். எத்தனை ஜனாதிபதி மாறி மாறி வந்தாலும். எனினும் எமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை யாரும் கூறவில்லை. 220ற்கும் மேற்பட்ட தாய்மாரை நாம் இழந்துள்ளோம். இவ்வாறான ஒரு சூழலிலேயே நாம் சர்வதேச நீதியை கோரி நிற்கின்றோம்.
ஓஎம்பி, டிஆர்சி என அனைத்தும் பொய்களே. எம்மை ஏமாற்றுவதற்காகவே இவைகள். பிள்ளைகளுக்கு , பாடசாலை மாணவர்களுக்கு என எவருக்கும் சுதந்திரம் இல்லை. எமது உரிமைக்காக போராடுவதற்கு எமக்கு சுதந்திரம் இல்லை. ஆகவேதான் நாங்கள் பெப்ரவரி 4ஐ கரிநாளாக பிரகடனப்படுத்துகின்றோம்.” எனக் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் சஹராஜன் சுகந்தி, திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கே.செபாஸ்டியன் தேவி ஆகியோர் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடதக்கது.



