76ஆவது சுதந்திரத் தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிக்க திட்டம் : யாழ் பல்கலை மாணவர்கள் அறிவிப்பு!

பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ நாடாக 133 வருடங்கள் இருந்த இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் 'கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பெப்ரவரி 4 ஆம் திகதி கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தப்படுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன அறிவித்துள்ளன.
தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கு.துவாகரன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், "தமிழ் மக்களுக்கான உரிமைகள் மீறப்படுகின்றன. இருப்பு கேள்விக்குரியாகியுள்ளது. அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. ஆட்சிகளும், ஆட்சியாளர்களும் மாறுகின்றார்கள். எனினும் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்பது இன்றுவரை முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.
அது வெறும் பேசுப்பொருளாக மாத்திரமே இருக்கின்றது. ஆகவே சுதந்திரத்தினத்தை வடக்கு, கிழக்கு தழுவிய கரிநாளாக பிரகடனப்படுத்துகின்றோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என மாணவர் ஒன்றிய தலைவர் மேலும் வலியுறுத்தியிருந்தார்.



