முல்லைத்தீவில் வெள்ளநீரால் அல்லலுறும் 28 குடும்பங்கள் : விடுத்துள்ள கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேராவில் குளத்தை அண்டிய பகுதியில் வாழும் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 28 அங்கத்தவர்கள் வெள்ள நீரால் அல்லலுறுகின்றனர்.
மழை முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் தமது குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் வடிந்தோடாத நிலையில், வெள்ளக்காடாக காட்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
வடிகாலின்மை காரணமாக இடைத்தங்கள் முகாம்களிலே 22 நாட்களாக தங்கி இருப்பதாகவும், அப்பகுதியில் அமைந்துள்ள தேராவில் குளத்திற்கான வடிகால்கள் இல்லாமை காரணமாக இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வருடமும் இல்லாதவாறு இம்முறை இவ்வாறு கடும் மழை காரணமாக வெள்ள நீர் வடிந்து ஓட முடியாத நிலையில் சிறுவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை பெரும் சிரமப்படுவதுடன், அவர்கள் அனைவரும் தற்பொழுது பாடசாலை மண்டபத்திலே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளதால் உறவினர் வீடுகளுக்கு செல்லும்படி கிராம அலுவலர் கூறிவருகின்றார். இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று தமக்கு தீர்வை பெற்று தருவதாக கூறிச் சென்ற போதிலும் தற்பொழுதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் விரைவாக எமது பகுதியில் உள்ள குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்கான வடிகான்களை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வாழும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.



