கோடநாடு எஸ்டேட்டில் அமைக்கப்படும் ஜெயலிதா சிலை, மணிமண்டபம் ; பூமி பூஜை செய்த சசிகலா

#India #Tamil Nadu #Tamil #Tamilnews #WorldNews
Lanka4
3 months ago
கோடநாடு எஸ்டேட்டில் அமைக்கப்படும் ஜெயலிதா சிலை, மணிமண்டபம் ; பூமி பூஜை செய்த சசிகலா

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, ஜெயலலிதா உடன் கோடநாடு பங்களாவில் தங்குவது வழக்கம். கடைசியாக 2016-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கோடநாடு பங்களாவில் தங்கியிருந்தனர். அதன்பின் 2016 ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம், 2017ல் இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம், பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை என அடுத்தடுத்து நடந்த சம்பங்களால் சசிகலா கோடநாடு எஸ்டேட்டிற்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா நேற்று கோடநாடு எஸ்டேட்டிற்கு சென்றார். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், காரில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டிற்கு புறப்பட்டு சென்றார். மூன்று நாட்கள் கோடநாடு எஸ்டேட்டில் தங்கும் சசிகலா, இன்று காலை கோடநாடு பங்களாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை அமைக்க பூமி பூஜை செய்கிறார். அதனை தொடர்ந்து தனது முக்கிய ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துகிறார். கோடநாடு பங்களாவில் அமைக்கப்படும் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அவரது பிறந்தநாளை ஒட்டி சசிகலா திறந்து வைக்க உள்ளார். 

இன்று காலை கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா சிலை மற்றும் மணி மண்டபம் அமைப்பதற்கான பூமி பூஜையில் சசிகலா கலந்து கொண்டார். பின்னர் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோடநாடு அம்மா (ஜெயலலிதா) விற்கு பிடித்த இடம். எங்கள் இரண்டு பேர் மீதும் தொழிலாளர்கள் அன்பு வைத்திருக்கிறார்கள். இங்குள்ள தொழிலாளர்களை நாங்கள் தொழிலாளர்களாக பார்க்கவில்லை குடும்பமாக பார்த்தோம். அம்மா வரும் போது தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்திற்கே சென்று பேசுவோம். அது போன்று சகஜமாக அம்மா இங்கு வாழ்ந்துள்ளார். பொதுவாக குடும்பத்தில் ஒரு பெண் எப்படி இருப்பாரோ அதேபோல் கோடநாட்டில் இருப்பார். அடிக்கடி சொல்வார்கள் அந்த காலம் எனக்கொரு குழந்தை பருவத்தோடு முடிந்து விட்டது. ஆனால் அந்த நாட்களை எனக்கு திரும்ப ஞாபகப்படுத்துவது இந்த கோடநாடு தான் என கூறுவார். வெளிநாடுகளுக்கு எல்லாம் ஏன் செல்வதில்லை என கேட்பார்கள். இங்கு கோடநாடு உள்ளது. 

இதை விட பெரியது எதுவும் இல்லை. அம்மாவின் விருப்பப்பட்ட இடம். அதனால் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்பது நான் பெங்களூரில் இருந்து வந்த பிறகு நினைத்துக் கொண்டிருந்தேன். இங்குள்ள தொழிலாளர்கள் அம்மாவும் மறைந்துவிட்டார். நானும் வரவில்லையே என ஏக்கத்தில் இருந்தனர். அவர்களை பார்க்க வேண்டுமென்றும் அம்மாவிற்காக இன்று நல்ல நாள் நல்ல விஷயத்தை துவங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் காலம் காலத்திற்கும் மனிதர்கள் வாழும் வரை இந்த இடம் அம்மாவிற்கான இடம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும். அதனால் இந்த இடத்தை தேர்வு செய்து அம்மாவின் சிலை, மணி மண்டபத்திற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த வீட்டிற்குள் இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பக்கம் திரும்பும் போது, அம்மா என் உடன் இருப்பது போல் உணர்கிறேன். அம்மாவோடு இருப்பதை போல் நினைத்து நான் இருக்கிறேன். 

அதையும் தாண்டி அம்மாவிற்காக நிறைய செய்ய வேண்டும் அதை எல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வந்திருக்கிறேன். அனைவரும் இங்கு வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அம்மாவின் சிலை மணி மண்டபம் கட்டப்படுகிறது” என்றார்.