இலங்கை மக்களுக்கு மிகப் பெரிய வரிச்சுமையுடன் பிறந்த புதிய ஆண்டு!! கொண்டாட்டமா? திண்டாட்டமா?

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Vat
Thamilini
1 year ago
இலங்கை மக்களுக்கு மிகப் பெரிய வரிச்சுமையுடன் பிறந்த புதிய ஆண்டு!! கொண்டாட்டமா? திண்டாட்டமா?

பிறந்துள்ள இந்த (2024) புதுவருடம் அனைத்து இலங்கையர்களுக்கும், அதிக வரிச்சுமையுடன் கூடிய ஒரு புதிய ஆண்டாக அமைந்திருக்கிறது. 

வட் வரியை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இதுவரை 15% ஆக இருந்த VAT, 2024 ஜனவரி 1 முதல், அதாவது இன்று (01.01) முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இந்த VAT உயர்வு பொருந்தும் என்பதும்  குறிப்பிடத்தக்கது. எல்பி கேஸ், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை புதிய வாட் வரிக்கு உட்பட்டது மற்றும் அனைத்து மொபைல் போன்கள், மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள், மருந்து உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கும் VAT விதிக்கப்படும்.  

இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இயந்திரங்களும் VATக்கு உட்பட்டவை. சோலார் பேனல்கள், வீட்டு சூரிய சக்தி அமைப்புகளுக்கும் VAT விதிக்கப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை, நகைகள், மென்பொருள், கொப்பரை, ரப்பர், முட்டை, தேயிலை, தேங்காய் எண்ணெய் மற்றும் திரவ பால் ஆகியவையும் வாட் வரியை அதிகரிக்கும் பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.  

மேலும், காலணி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முடிக்கப்பட்ட தோல் மீது VAT விதிக்கப்படுகிறது. கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கலை விற்பனையின் போது VATக்கு உட்பட்டது. சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதில் வழங்கப்படும் சேவைகளுக்கு, பயண முகவர் நிறுவனங்களால் வழங்கப்படும் தொடர்புடைய சேவைகளுக்கு VAT வசூலிக்கப்படுகிறது.  

திரைப்பட விநியோகம், கண்காட்சி மற்றும் தயாரிப்பின் போது ஆய்வக வசதிகள் மீதும் VAT புதிதாக விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தானியங்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூப்பர்ஃபுட்களும் VATக்கு உட்பட்டவை. VATக்கு உட்பட்ட பல பொருட்கள் மற்றும் சேவைகளையும் அரசாங்கம் அறிவித்தது. சிறப்பு வணிக வரிக்கு உட்பட்ட பொருட்களுக்கும் VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும், VAT அதிகரிப்பால் சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பல தொலைபேசி வலையமைப்பு சேவைகள் தமது கட்டணங்களை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளன.

இதற்கமைய இன்று காலை (01.01.2024) முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து பொருட்களுக்குமான, சேவைகளுக்குமான கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்துள்ளன. இலங்கை மக்களுக்கு இந்த ஆண்டு மிகப் பெரிய சுமையை கொண்டுவரக்கூடிய ஆண்டாகவும், சவால்களை கொண்டுவரக்கூடிய ஆண்டாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

இவையொருப்புறம் இருக்க வட் வரி அதிகரிப்பால் பொருட்களின் விலை உயர்வு, மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதை குறைப்பது, அல்லது தவிர்ப்பது பொருளாதார சுருக்கத்திற்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் பட்டம் பெற்ற பல தொழில் வல்லுநர்கள், இளைஞர், யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனூடாக இலங்கையில் இளம் தலைமுறையினரின் பங்களிப்பு குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் சொல்லெனா துயரத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில் பெரும்பாலும் தங்களுக்கு பழக்கப்பட்ட அல்லது காலம்காலமாக ஆதரவளித்து வந்த ஆட்சியளர்கள் மீது ஒருவித வெறுப்புடன் இருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஆகவே எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் போகலாம் என்ற ஒரு நிலையும் இருக்கிறது. கடந்த காலங்களில் நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது மக்களின் ஆணையில்லாமல்  நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த ரணில் விக்கிரமசிங்க தேர்தல் வியூகங்களை இப்பொழுதே வகுக்க ஆரம்பித்திருப்பதாகவும் செய்திகளின் ஊடாக அறிய முடிகிறது. 

மறுபுறம் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் இருந்த மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் ஆட்சியிலும் ஒருவித தொய்வு நிலையை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. என்னதான் ஆட்சியை கைப்பற்றுவோம்  என அவர்கள் சொல்லிக்கொண்டாலும், மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே. இவ்வாறாக பிரதான கட்சிகள் செல்வாக்கு இல்லாமல் இருக்கின்ற இந்த சமையத்தில் ஜே.வி.பி என சொல்லக்கூடிய தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பாலான மக்கள் மத்தியில் ஒருவித சாதக மனோநிலையை காணக்கூடியதாகவும் இருக்கிறது. 

எது எப்படியோ மக்களின் குறைகளை தீர்க்கக்கூடிய ஒரு நல்ல ஆட்சியாளரையும், நல்ல மக்கள் பிரதிநிதிகளையுமே மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆகவே மக்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த அரசாங்கமும் மக்களுக்கானதாக இருந்தால் போதுமானது என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் இருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!