பாடகியின் ஆடை தொடர்பாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை கண்டனம்
ராகம தேவத்த பசிலிக்கா தேவாலயத்துக்கு வெளியே இடம்பெற்ற கிறிஸ்மஸ் தினத்திற்கான நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்கு பாடகி ஒருவர் அணிந்திருந்த ஆடை தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
குறித்த தேவாலயத்துக்கு அருகில் தனியார் தொலைக்காட்சி கிறிஸ்மஸ் தினத்திற்கான நிகழ்ச்சி ஒன்றை ஒளிப்பதிவு செய்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய பாடகியான நதாஷா பெரேரா அணிந்திருந்த ஆடை தொடர்பில் கண்டனம் தெரிவிப்பதாக கொழும்பு பேராயர் இல்ல சமூக தொடர்பு பிரிவு மற்றும் கலாசார மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இந்த சம்பவம் தொடர்பில் பேராயர் மற்றும் கத்தோலிக்க திருச்சபை மீது சிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி கத்தோலிக்க திருச்சபையினால் தேவாலயத்தில் ஒளிப்பதிவு செய்யப்படவில்லை.
தனியார் தொலைக்காட்சியினாலேயே ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கிறிஸ்மஸ் தின நிகழ்ச்சி மற்றும் மத நிகழ்ச்சி என்பதால் அதனை ஒளிப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இடம்பெறவேண்டிய பாடகர்கள், அவர்களது ஆடைகள், கமரா கோணங்கள் முதலான விடயங்கள் தயாரிப்பாளர்களால் தீர்மானிக்கப்பட்டன. அவை தேவாலயத்தினால் தீர்மானிக்கப்பட்டதல்ல.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சி வருத்தம் தெரிவிக்க மறுத்து வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.