யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எதிரொலித்த உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம்
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் உடுப்பிட்டியில் மக்கள் எதிர்ப்பையும் மீறி அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலை உடனடியாக மூடப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்களால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர், இதனை மூடுவது தொடர்பில் உடுப்பிட்டியில் உள்ள சமூக அமைப்புகள் நீதிமன்றத்தை அணுகுவதே நல்லது என தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினையை தீர்க்க மக்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டுமெனில் எதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என கஜேந்திரனால் கேள்வியெழுப்பப்பட்டது.
மக்கள் நலனுக்கு மாறாக ஏன் செயற்படுகின்றீர்கள் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தான் விரைவில் நல்லதொரு தீர்வை காண்பதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களிலும் இந்த விடயம் பேசப்பட்டதுடன் ஓரிரு வாரங்களுக்குள் இதற்கு நல்லதொரு தீர்வு தருவதாக கூறிய நிலையில் ஒரு மாதம் கடந்தும் தீர்வின்றி இந்த விவகாரம் இழுபட்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.