தமிழ்நாடு தொடக்கம் ஈழ அரசியல்வரை தனக்கென தனிமுத்திரை பதித்தவர் விஜயகாந்த்!
எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர் கப்டன் விஜயகாந்த்.
இன்று அதிகாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், சினிமாவில் வாய்ப்பு தேடுவதற்காக விஜய்ராஜ் என்று தனக்கு பெயர் சூட்டிக் கொண்டார்.
புரட்சிக் கலைஞர்' என்றும், 'கேப்டன்' என்றும் தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த், தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஒருங்கே பெற்றவர்.
சாதி, மத பேதமின்றி ஏழையெளிய மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். ஆரம்பத்தில் இவர் மதுரை மாகாளிபட்டியில் தனது அப்பாவின் அரிசி ஆலையைக் கவனித்துக்கொண்ட அவர், சினிமா வாய்ப்பு தேடுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார்.

சட்டம் ஒரு இருட்டறை, ரமணா, வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள், அம்மன் கோயில் கிழக்காலே, கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் போன்ற வெற்றிபடங்கள் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர்.
விஜயகாந்த் நடித்த ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘உழவர் மகன்’, ‘புலன் விசாரணை’ ஆகியவை வெள்ளி விழா கண்டன. 153-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடிக்கும் அளவுக்கு பிரபல்யமான நடிகராக வலம் வந்தார்.
‘செந்தூரப்பூவே’ படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற விஜயகாந்த், தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.விருது, கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகாந்த், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நட்சத்திர கலைவிழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அதுவரை இருந்த நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார்.
மேலும் நலிந்த கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்தார். நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
காவிரி பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத்தை மேற்கொண்டும் மக்கள் அனைவரையும் தன்பக்கம் ஈர்த்தார்.
அத்தோடு நின்றுவிடாமல் ஈழத் தமிழர்களின் பிரச்சனை போன்றவற்றில் அதீத ஈடுபாட்டுடன் செயற்பட்டு கொண்ட விஜயகாந்த் விடுதலை புலிகள் தலைவர் மீது கொண்ட பேரன்பால் தன் மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிக் கொண்டார்.
1984-ம் ஆண்டு ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து நடிகர், நடிகைகளுடன் உண்ணாவிரதம் நடத்தி, அப்போதைய தமிழக ஆளுநரிடம் மனு அளித்தார்.
தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்த பெருமை இவருக்கு உண்டு. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் விஜயகாந்த்.
தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான எப்பொழுதும் மக்கள் மனங்களில் நிறைந்திருந்தார். தனது திரைப்படங்களில் தனது கட்சிக் கொடியை இடம்பெறச் செய்ததுடன், அரசியல் ரீதியான வசனங்களையும் இடம்பெறச் செய்தார் விஜயகாந்த். 2005ஆம் ஆண்டு மதுரையில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தி தனது தேமுதிக கட்சியை அதிகாரபூர்வமாக தொடங்கினார்.
கட்சி ஆரம்பித்து ஒரே ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டவர்.

மிகவும் சுறுசுறுப்பாக, மேடைப்பேச்சுகளின்போது அனல் பறக்கவிட்ட விஜயகாந்த்தின் உடல்நிலையில் மெல்ல மெல்ல மாற்றங்கள் தெரிய தொடங்கின.
இந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலையுடன், ஒரு காலத்தில் எதிர்கட்சியாக இருந்த தேமுதிகவும் இப்படியாக படிப்படியாக தேய்வடைந்திருந்தது.
ஆரம்பத்தில் இலவச திருமண மண்டபங்கள், ஏராளமான ஏழை ஜோடிகளுக்கு இலவசத் திருமணம், கேப்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி, லிட்டில் ஃபிளவர் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நன்கொடை, இலவச கணினிப் பயிற்சி மையம் என எண்ணிடலங்கா உதவிகளைச் செய்தவர். சுனாமி பேரிடர், குஜராத் பூகம்பம், கார்கில் போர் உள்ளிட்ட துயரங்களின்போது ஏராளமான நிவாரண உதவிகளை அனுப்பி உதவியர் விஜயகாந்த்.
தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர்.
எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் மக்கள் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.