சம்பந்தனை சந்தித்த நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர்! தீர்வு குறித்து கலந்துரையாடல்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும், இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லெற்றனுக்கும் இடையில் புதன்கிழமை (27) நடைபெற்ற சந்திப்பில் வட, கிழக்கு மாகாணங்களின் அரசியல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் இனநல்லிணக்கம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லெற்றனின் பதவிக்காலம் முடிவுக்குவந்துள்ள நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அவர் மீண்டும் நாடு திரும்புகிறார்.
அடுத்தாக நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட வெளிவிவகார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அவர், புதன்கிழமை (27) இலங்கையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட முக்கிய தரப்பினருடன் பிரியாவிடை சந்திப்புக்களை நிகழ்த்திவருகின்றார்.
அதற்கமைய புதன்கிழமை (27) இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்த உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லெற்றன், வட, கிழக்கு மாகாணங்களின் அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, சமூக நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பு மூலமான நடவடிக்கைகள் என்பவற்றை இலங்கையும், நியூஸிலாந்தும் அணுகும் விதம், இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

அதேவேளை சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவைவும் சந்தித்த அவர், மருந்துப்பொருள் விநியோகத்தில் நிலவும் சிக்கல்கள் உள்ளடங்கலாக நாட்டின் சுகாதாரத்துறை நிலைவரம், உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவருடன் கலந்துரையாடினார்.
மேலும் புதன்கிழமை (27) வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை - நியூஸிலாந்து நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு, தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை கையாளும் இராஜதந்திர நகர்வுகள் மற்றும் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் பூகோள - இராஜதந்திர ரீதியிலான அபிவிருத்தி என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டது.