கிளிநொச்சி குளத்திலிருந்து நீர் பெறுவதை தவிர்த்து மாற்று ஏற்பாட்டு மும்மொழிவை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!
குடி நீருக்கு உதவாதவாறு மாசுபடுத்தப்படும் கிளிநொச்சி குளத்திலிருந்து நீர் பெறுவதை தவிர்த்து மாற்று ஏற்பாட்டு மும்மொழியை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன் போதே அவர் இவ்வாறு அதிகாரியை கோரியுள்ளார். கிளிநொச்சி குளத்திலிருந்து பழைய முறையை பயன்படுத்தி நீர் சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. சுமார் 7000 இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
ஆனால், குளத்தில் உள்ள மனித கழிவுகள், மலசலகூட கழிவுகள், வாகன கழிவு ஒயில்கள், நகர கழிவுகள், விவசாய கழிவுகள் என பலதும் கிளிநொச்சி குளத்தில் கலந்து நீர் மாசுபட்டுள்ளது. அதனால், குடிநீரில் மணத்தினை துப்பரவு செய்ய முடியவில்லை. முழுமையாக மக்கள் எதிர்பார்க்கும் குடிநீரை தற்பொழுது உள்ள சுத்திகரிப்பு முறை மூலம் எம்மால் வழங்க முடியாது.

ஆனால், தற்பொழுது மிக பெரிய திட்டம் ஒன்றின் ஊடாக நவீன சுத்திகரிப்பு முறை மூலம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் முதல் பகுதியில் அதன் மூலம் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர் தெரிவித்தார்.
இங்கு குறிப்பிடப்பட்டது போன்று, தற்பொழுது பெறப்படும் கிளிநொச்சி குளத்தின் நீர் பாவனைக்கு உதவாதது என்ற முடிவுக்கே வர முடியும் என வட மாகாண ஆளுநர் தெரிவித்தார். அதனை மக்களுக்கு வழங்க முடியாது. மாற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இரணைமடு குளத்தில் நீரை நேரடியாக பெறுவது தொடர்பிலும் ஆலோசனை முன்வைக்கப்பட்ட போதிலும், அதில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் எழும் என பொறியியலாளர் தெரிவித்தார்.
எனினும், புதிய திட்டத்தின் ஊடாக சுத்தமான குடிநீர் வழங்க முடியும் எனவும் பொறியியலாளர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மக்களுக்கு தவறான செய்தி சென்றுவிடக்கூடாது எனவும், புதிய சுத்திகரிப்பு முறைக்கு அதிக செலவாகும் எனவும் தெரிவித்தார்.
மக்களுக்கான சுத்தமான குடிநீரை வழங்குவதைக் கூறுவது எனவும், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி விஜயத்தின் போது தான் பேசுவதாகவும், அதற்கு மாற்றாக மும்மொழிகளை தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.