சிறப்பாக இடம்பெற்றுவரும் அம்பாள் குளம் ஸ்ரீ மனோன்மணி ஆலய கட்டுமானப் பணிகள்! நிர்வாகத்தினர் விடுத்துள்ள கோரிக்கை
கிளிநொச்சி அம்பாள் குளம் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயத்தில் கட்டுமானப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த மனோன்மணி அம்பாள் ஆலயமானது குறித்த பிரதேசத்திலேயே அமையப்பெற்றிருப்பது இப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு பெரும் அருட்கடாட்சமாகும்.

அத்தோடு இந்த ஆலய நிர்வாகம் சார்பில் இங்கிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு ஆன்மிக நாட்டத்தினை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். குறித்த ஆலயத்தின் புணருத்தானப் பணிகள் அப் பகுதியில் வாழும் மக்களின் நிதிப் பங்களிப்பில் இடம்பெற்று வருகின்றது.

அத்தோடு சுவிஸ் துர்காபீடம் சார்பாக ஸ்ரீ சரவணபவ சுவாமிகள் பத்து இலட்சம் ரூபாவினை வழங்கியிருந்தார், மேலும் லண்டன் கற்பகவிநாயக ஆலயத்தினூடாக அதன் தலைவர் ஐந்து இலட்சத்தி எண்பத்தி இரண்டாயிரம் ரூபா நிதியினை வழங்கியிருந்தார்.

இந்த பணத்தினை வைத்து ஒரு தொகுதி மரங்களை வாங்கியிருத்ததாக ஆலய நிர்வாக பொருளாளர் தெரிவித்துள்ளார். மேலும் இப்பணம் போதுமானதாக இல்லாத பட்ஷத்தில் மேலதிக நிதியினை வேண்டிநிற்கின்றார்கள் அம்பாள் குளம் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாகத்தினர்.

இதேவேளை அண்மையில் நிர்வாகம் ஆலயத்தை பொறுப்பெடுத்து மிகச் சிறப்பாக ஆலய நிர்வாகத்தை முன்னெடுத்து செல்வதாலும் ஆலய கட்டுமான பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாலும் அவர்கள் பதவிக்கு வருகை தந்து மூன்று மாதங்களை எட்டிய நிலையில் காலாண்டு உற்சவமாக அவ் ஊர் மக்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து தொண்ணூறு பானைகளில் பொங்கல் செய்து சிறப்பு வழிபாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
