இந்திய - பசுபிக் ஒப்பந்தம்: இலங்கை மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகள் ஆராய்வு
இந்திய - பசுபிக் ஒத்துழைப்பு செயற்திட்ட அமுலாக்கம் குறித்து இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இணைந்து கூட்டாக ஆராய்ந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத்தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதம் மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார செயற்பாட்டுப்பிரிவின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான நிறைவேற்றுப்பணிப்பாளர் நிக்லஸ் வர்ன்ஸ்ரோம் ஆகியோருக்கு இடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ப்ருசேல்ஸில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்திய - பசுபிக் ஒத்துழைப்பு செயற்திட்டம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்திய - பசுபிக் ஒத்துழைப்பு செயற்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள குறிக்கோள்கள் பெருமளவுக்கு அடையப்பட்டுள்ளமையைப் பாராட்டிய கிரேஸ் ஆசீர்வாதம், அனைத்து நாடுகளினதும் உரிமைகளை நிலைநிறுத்தக்கூடியவாறான பாதுகாப்பானதும், சுபீட்சமானதுமான இந்துசமுத்திரப்பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதில் இலங்கை கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய உறுதிப்பாட்டையும் எடுத்துரைத்தார். குறிப்பாக கடற்பிராந்தியங்களுக்கான சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் கோட்பாடுகளுக்கு அமைவாக இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் கப்பற்போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் காணப்படவேண்டியது அவசியமென அவர் வலியுறுத்தினார்.
அத்தோடு தற்போது இந்து சமுத்திர எல்லை நாடுகள் அமைப்புக்கு இலங்கை தலைமைதாங்கும் நிலையில், பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான இயலுமை காணப்படுவதாகவும் தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதம் சுட்டிக்காட்டினார்.
அதனை ஏற்றுக்கொண்ட நிக்லஸ் வர்ன்ஸ்ரோம், இந்திய - பசுபிக் பிராந்தியத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கும் அவதானம் பற்றி எடுத்துரைத்ததுடன் வர்த்தகம், பசுமை மற்றும் தூய சக்திவலு பரிமாற்றம், காலநிலை மாற்றம் போன்ற பொதுவான சவால்களை எதிர்கொள்ளல் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரங்கள் போன்றவற்றில் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு தொடர்பிலும் குறிப்பிட்டார்.