மலேசிய வைத்தியர்களின் ஆலோசனையில் யாழ் பல்கலைக்கழக விகாரையில் மருத்துவ முகாம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக பெளத்த விகாரையில் மலேசியா வைத்தியர்களின் ஆலோசனையில் மருத்துவ முகாம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள "சரசவி பெளத்த" விகாரையில் குறித்த முகாம் இடம்பெற்றது.
மலேசியாவிலிருந்து வருகை தந்த வைத்தியர் குழுவினரின் வைத்திய ஆலோசனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் அக்குபஞ்சர் சிகிச்சையும் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பெளத்த விகாரை மற்றும் களணி நாகாநந்தா சர்வதேச பெளத்த பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து குறித்த வைத்திய முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது 500 பேருக்கான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையும், 200 பேருக்கான உலருணவுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இன மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த முகாமில், பொன்னகர், மலையாளபுரம், அறிவியல் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

குறித்த முகாமில், பெளத்த மத தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
