இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றத்தில் மாற்றம்!
இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற வர்த்தக பரிமாற்றத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
2022 ஜுலை - 2023 ஜுன் வரையான 12 மாதங்களில் இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட வர்த்தகப் பரிமாற்றத்தின் மொத்தப்பெறுமதி 1.4 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்களாகும்.
இலங்கைக்கும், பிரித்தானியாவுக்கும் இடையில் கடந்த 2022 ஜுலை - 2023 ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வர்த்தக மற்றும் முதலீட்டு செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு அந்நாட்டின் வணிகம் மற்றும் வர்த்தகத்துக்கான திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரவுப்பதிவிலேயே மேற்கண்ட விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்தரவுகளின்படி இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டுடன் (2023 ஜுன் மாதத்துடன்) முடிவுக்கு வந்த கடந்த 4 காலாண்டுகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் அடங்கிய மொத்த வர்த்தகப் பரிமாற்றத்தின் பெறுமதி 1.4 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் ஆகும்.

கடந்த 2022 இல் இரண்டாம் காலாண்டுடன் (2022 ஜுன்) முடிவுக்கு வந்த 4 காலாண்டுகளில் (2021 ஜுலை - 2022 ஜுன்) பதிவான இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பரிமாற்றுத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை 25 மில்லியன் ஸ்ரேலிங் பவுண், அதாவது 1.9 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட 1.4 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்களில் இலங்கைக்கான பிரித்தானிய ஏற்றுமதிகளின் மொத்தப்பெறுமதி 394 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களாகும்.
2022 ஜுனில் முடிவுக்கு வந்த 4 காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை இது 6.8 சதவீத அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
அதேபோன்று இக்காலப்பகுதியில் இலங்கையிலிருந்து பிரித்தானியாவினால் செய்யப்பட்ட இறக்குமதிகளின் மொத்தப்பெறுமதி 973 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களாகும்.
இவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டுடன் நிறைவடைந்த கடந்த 4 காலாண்டுகளில் (2022 ஜுலை - 2023 ஜுன்) பிரித்தானியாவின் 79 ஆவது மிகப்பெரிய வர்த்தகப்பங்காளியாகவும், 72 ஆவது மிகப்பெரும் பொருட்கள்சார் வர்த்தகப்பங்காளியாகவும், 83 ஆவது மிகப்பெரும் சேவை வழங்கல்சார் வர்த்தகப்பங்காளியாகவும் இலங்கை காணப்படுகின்றது.