வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் ரணில் பச்சைக்கொடி காட்டுவார் என்கிறார் டக்ளஸ்!
காணி விடுவிப்பு தொடர்பில் முக்கியமான முடிவுகள் எட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வரும் வேளை காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும்.

வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்பவற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் 11 கட்டம் இருந்தது. அதில் 4 கட்டமே பூர்த்தியாகியுள்ளது.
ஏனைய கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் 100 வீதம் சரிவரும் என்ற நம்பிக்கை உண்டு.
உயர்பாதுகாப்பு வலயமாக படைத்தரப்புக்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க தொடர்ந்து முயற்சிக்கிறேன்.
முடிந்த வரையில் காணி விடுவிக்க நடவடிக்கைகளை எடுப்பேன். ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் வேளையில் காணிகளை விடுவிக்கவோ, அல்லது அது தொடர்பில் பச்சைக் கொடியை காட்டுவார்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.