மிஹிந்தலை, ரஜமஹா விகாரையின் விஹாராதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்!
மிஹிந்தலை, ரஜமஹா விகாரையின் விஹாராதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் இருப்பதாக கூறிக்கொண்ட இருவர் கடந்த 3 வாரங்களாக அந்த புனித ஸ்தலத்தில் இருந்த போது, சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர் என்றும், இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக விஹாராதிபதி கருதுவதாகவும் சஜித் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மிஹிந்தலை புனித தலத்தின் பாதுகாப்பு மற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எவருக்கும் இந்த அடையாளம் காணப்பட்ட நபர்கள் குறித்து தெரியாது என்றும், நொச்சியாகம பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் கட்டளைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த இருவரும் வந்துள்ளதாக பின்னர் தெரிய வந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கட்சி பேதமின்றி விஹாராதிபதியின் வாழ்க்கை தொடர்பான பொறுப்பு இருப்பதாகவும், நாட்டில் நடக்கும் தவறுகளை கட்சி வேறுபாடின்றி அவர் விமர்சித்து வந்தாலும் அவற்றைத் தாங்கிக் கொள்வது நமது கடமை என்றும், எனவே இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கோரிக்கை விடுத்தார்.