பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான தொண்டீஸ்வரர் ஆலயம் அழிவடைந்ததா? அழிக்கப்பட்டதா?
இலங்கையிலுள்ள பஞ்ச ஈஸ்வரங்களில் அழிந்துள்ளதாக கூறப்படும் தொண்டீஸ்வரம் ஆலயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். பஞ்ச ஈஸ்வரங்களில் ஐந்தாவது ஈஸ்வர ஆலயமான தொண்டீஸ்வரம் அழிவடைந்து, அடையாளமே இல்லாது போயுள்ளதாகவும், அந்த ஆலயத்தை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சிலாபம் நகரில் முன்னேஸ்வரம், திருகோணமலையில் திருகோணேஸ்வரம், மன்னாரில் திருகேதீஸ்வரம், கீரிமலையில் நகுலேஸ்வரம், மாத்தறையில் தொண்டீஸ்வரம் என ஐந்து சிவன் ஆலயங்கள் பஞ்ச ஈஸ்வரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இவ்வாறு காணப்படும் பஞ்ச ஈஸ்வரங்களில் மாத்தறை பகுதியிலுள்ள தொண்டீஸ்வரம் ஆலயம் மாத்திரம் அழிவடைந்து, ஆலயம் இருந்தமைக்கான அடையாளங்களே முற்றாக இல்லாது போயுள்ளன.
இலங்கையின் தெற்குப் பகுதியில் மாத்தறை மாவட்டத்தில் இந்த தொண்டீஸ்வரம் ஆலயம் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. மாத்தறை மாவட்டத்தின் தேவேந்திரமுனை (தெவிநுவர) எனும் பகுதியிலேயே இந்த ஆலயம் இருந்ததாக நம்பப்படுகின்றது.
எனினும், இந்த ஆலயம் தொடர்பான எந்தவித தகவல்களும் தற்போது இல்லாது போயுள்ளதுடன், ஆலயம் முழுமையாக அழிவடைந்து காணாமல் போயுள்ளது. இந்நிலையில் சர்வதேச ஊடகம் ஒன்று தொண்டீஸ்வரத்திற்கு நேரடியாகச் சென்று அங்கு ஆலயம் இருந்ததற்கான சான்றுகளைத் திரட்டியது.
தேவேந்திரமுனை பகுதியிலுள்ள பௌத்த விகாரையொன்றில் மாத்திரம், பழமை வாய்ந்த சிவலிங்கம் ஒன்று மற்றும் ஆலயம் ஒன்று காணப்பட்டமைக்கான பழமை வாய்ந்த கற்கள் சிலவற்றை அங்கு அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொண்டீஸ்வரம் ஆலயத்திற்கு சொந்தமானது என நம்பப்படும் சிவலிங்கம் உள்ளிட்ட சில புராதன அடையாளங்கள் அடங்கிய வீடியோ யூடியூப் தளத்தில் அண்மையில் வெளியிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.