உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு!
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை மற்றும் அது தொடர்பான சாட்சியங்களையும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் ரவூப் ஹக்கீம் உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் சாட்சியங்களையும் நான் குருநாகல் மறைமாவட்ட ஆயரான கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரிடம் கையளித்துள்ளேன்.
அவற்றைப் பரிசீலித்து எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவிக்குமாறு நான் அவர்களுக்குத் தெரிவித்தேன். தற்போது அது தொடர்பான பரிசீலனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது 30,000 அல்லது 40,000 பக்கங்கள் அடங்கிய அறிக்கை சட்டத் துறையினர் அது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.
அதன் பின்னர் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவிப்பார்கள். அத்துடன், நான் ஒரு காலத்தில் ஸ்கொட் யார்ட் நிறுவனத்தை அழைக்க இருந்தேன். அது தொடர்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதால் அது இடம்பெறவில்லை.
சம்பந்தப்பட்ட ஆணைக் குழுவின் அறிக்கை மற்றும் சாட்சியங்களையும் ஆயர் பேரவையிடம் ஒப்படைத்துள்ளேன். அந்த செயற்பாடுகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.