இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாட்டிற்கு மனிதவுரிமை கண்காணிப்பகம் விசனம்!
மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மிகமோசமாக மீறப்பட்டிருக்கின்ற போதிலும், இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இடமளித்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் பிரகாரம் நிறைவேற்றப்படவேண்டிய கடப்பாடுகள் மற்றும் பூர்த்திசெய்யப்படவேண்டிய நிபந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு கடந்த 2020 - 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் என்பவற்றை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றிய விசேட அதிகாரிகளின் கூட்டு அறிக்கை இரு தினங்களுக்கு முன்னர் ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் ஐரோப்பிய பேரவை ஆகியவற்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் எவ்வாறு காணப்பட்டது என்பது குறித்து மிகப்பரந்துபட்ட ரீதியில் இவ்வறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பவற்றின் சுயாதீனத்தன்மை மற்றும் செயற்திறன் என்பன அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் விளைவாகக் கேள்விக்கு உள்ளாகியிருப்பதாகவும், மந்தகரமான நல்லிணக்க செயன்முறை மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் தொடர் பிரயோகம் என்பன சிறுபான்மையின மக்கள் நடத்தப்படும் விதம் தொடர்பான கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி ஐரோப்பிய ஒன்றியம், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் மீளுறுதிப்படுத்தவேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் மாத்திரமன்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறும் ஏனைய நாடுகளின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்தும் இவ்வாறான மதிப்பாய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் அம்மதிப்பாய்வு அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக்கொண்டு வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறும் நாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழு வெளியிட்டுள்ள மதிப்பாய்வு அறிக்கைகளின் மூலம் பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்கள் மீறல்களில் ஈடுபட்டுவருவது வெளிப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், 'இவ்வறிக்கைகளின்படி சில நாடுகளுக்கு அவற்றின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் அதேவேளை, மேலும் சில நாடுகள் அவற்றின் மனித உரிமை மீறல்களுக்கான பின்விளைவுகள் தொடர்பில் அச்சமின்றி செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டிருக்கின்றது' என விசனம் வெளியிட்டுள்ளது. 'மிகத்தெளிவானதும், பகிரங்கமானதுமான நிர்ணயங்கள் இல்லாவிடின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் விதிக்கப்படும் நிபந்தனைகள் அவற்றுக்குரிய நம்பகத்தன்மை இழந்துவிடும்' எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மிகமோசமாக மீறப்பட்டிருக்கின்ற போதிலும், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கு இடமளிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 'இலங்கை கடந்த 2010 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இழந்ததுடன், மனித உரிமைகள்சார் மறுசீரமைப்புக்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவாதங்களுக்கு அமைவாக மீண்டும் 2017 இல் அச்சலுகையைப் பெற்றுக்கொண்டது. இருப்பினும் அவை இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எதுஎவ்வாறெனினும் தனிப்பட்ட வழக்குகள் மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மறுசீரமைத்தல் உள்ளிட்ட சட்டவியல் நடவடிக்கைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ச்சியாகவும், பகிரங்கமாகவும் கரிசனைகளை வெளியிட்டுவந்தது. அதுமாத்திரமன்றி ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இலங்கை செயற்திறன்மிக்க முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியிருந்தது' எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.