இலங்கையில் மிகப்பெரிய புத்தர் சிலையை அமைக்கவுள்ள சீனா!
இலங்கையில் மிகப்பெரிய புத்தர் சிலையை அமைக்க உள்ளதாக சீனா உறுதியளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க், உறுதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போதே சேன் யிங்க் இவ்வாறு பிரதமரிடம் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது என்றும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் பிரதமர், இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடன் வழங்கும் நாடுகளுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு ஆதரவளிப்பதற்கான நம்பிக்கையை சீனாவின் ஆதரவு ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த சேன் யிங்க்,
“சீனாவின் நெருங்கிய நண்பராக இலங்கை உள்ளது. புதிய திட்டங்களுக்கு ஒத்துழைத்து முதலீடு செய்யவும், கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய பகுதிகளை விரிவுபடுத்த எதிர்பார்க்கிறோம்.
சிரமங்களை சமாளித்து இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டு சீனா மகிழ்ச்சி அடைகிறது. பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கான முயற்சிகளுக்கு சீனா தொடர்ச்சியான ஆதரவை வழங்கும்” என தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சீன தூதுவர் சேன் யிங்க், மத உறவுகளின் நீடித்த அடையாளமாக இலங்கையில் மிகப்பெரிய புத்தர் சிலையை விரைவில் நிர்மாணிக்க சீனா முன்மொழிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.