அலெக்ஸின் மரணத்துக்கு நீதிகோரி சடலத்துடன் வீதிக்கு இறங்கிய மக்கள்!
யாழ் - வட்டுக்கோட்டையில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் உயிரிழப்புக்கு நீதிகோரி நேற்றைய தினம் (21.11) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த இளைஞரை பொலிஸார் கொடூரமாக அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இளைஞரின் மரணத்திற்கு காரணமாக வட்டுக்கோட்டை பொலிஸ் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதேசவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்தங்கேணியைச் சேர்ந்த 26 வயதுடைய நாகராசா அலெக்ஸ் என்பவரின் சடலம் நவம்பர் 21ஆம் திகதி, இளவாலை வெல்லாவெளி மயானத்திற்கு இறுதிக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட போதே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இளைஞரின் உயிரிழப்பிற்கு நீதி கோரி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் எழுதப்பட்ட பதாகைகள் மாத்திரமின்றி, 'வட்டுக்கோட்டை பொலிஸாரின் அராஜகம் ஒழிக, அலெக்ஸுக்கு நீதி வேண்டும்' என சிங்கள மொழியிலும் பதாகைகள் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டன.
களவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாகராசா அலெக்ஸ், நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.