முறிகண்டியில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக சிரமதான பணி முன்னெடுப்பு!
வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்தும் எதிர்பாப்புடன் முறிகண்டி மக்கள் இன்று (22.11) சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
பிரதான வாய்க்கால்களில் காணப்படும் பற்றைகளினால் உக்கும், உக்காத பொருட்கள் அடைபட்டு வெள்ள நீர் மக்கள் குடியிருப்புகளிற்குள் புகுந்து வருகின்றது.

இதன் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், போக்குவரத்து செய்வதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முறிகண்டி வர்த்தகர் சங்கம், கிராம மட்ட அமைப்புக்கள் பொது மக்களுடன் இணைந்து மாபெரும் சிரமதான பணியை இன்று ஆரம்பித்துள்ளனர்.

இதன் போது பிரதான வாய்க்கால்களில் காணப்பட்ட பற்றைகள் அகற்றப்பட்டுள்ளன. அத்துடன் பெரும் தொகையான பிளாஸ்ரிக் போத்தல்கள் அகற்றப்பட்டு பிரதேச சபையினர் ஊடாக வெளியேற்றப்பட்டது.

வெள்ள நீர் தடையின்றி வாய்க்கால்கள் ஊடாக கடந்து செல்லும் வகையில் முன்னெடுக்கப்படும் குறித்த சிரமதான பணி ஊடாக வெள்ள அனர்த்தம் கட்டுப்படுத்தப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.