குற்றச்சாட்டு நிரூபிக்கபப்ட்டால் பாராளுமன்ற உறுப்புரிமையை துறப்பேன்: ரஞ்சித் பண்டார
மலக்குழிக்குள் விழுந்துள்ள பன்றிகளின் சண்டைக்கான அழைப்பை சிங்கமான நான் ஏற்க மாட்டேன். அதேவேளை என் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் வன்முறை குற்றச்சாட்டை நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்புரிமையை துறப்பேன் என கோப் குழுவின் தலைவரும் பொதுஜன பெரமுன எம்.பி.யுமான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (20) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.
நான் சபையில் இல்லாத நேரத்தில் எனது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் வகையில் எதிர்கட்சியினர் பல பொய்யான குற்றச்சாட்டுக்களை எனக்கு எதிராக முன்வைத்துள்ளார்கள்.
இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நான் முழுமையாக நிராகரிக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான ஹேஷா விதானகே என் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது முற்றிலும் அடிப்படையற்றது.ஆகவே இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கவியல் குழு ஊடாக விசாரணை செய்ய வேண்டும். நான் கடினமான முறையில் உயர்வடைந்துள்ளேன்.
சாதாரண தர பரீட்சை எழுதாமல் வெளிநாட்டுக்கு சென்று படிக்கவில்லை. அதற்கான வசதியும் என்னிடம் இருக்கவில்லை. மலகுழிக்குள் விழுந்த பன்றி சிங்கத்தை சண்டைக்கு அழைக்கும் போது சிங்கம் அதனுடன் சண்டைக்கு செல்வதில்லை.
பன்றியுடன் மோதுவதற்கு சிங்கம் அச்சமடையில்லை. ஆனால் பன்றியுடன் மோதினால் அதன் மீதுள்ள மலம் தன்மீதும் ஒட்டிக் கொள்ளும் என்பதால் சிங்கம் விலகிச் செல்லும்.ஆகவே சிங்கமான எனது பொறுமையை பலவீனமாக கருத வேண்டாம் என்றார்.