மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கிற்கு 0.1 வீதமே ஒதுக்கீடு! கஜேந்திரகுமார்
யுத்தத்தினால் 30 வருடங்களாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு,கிழக்கு மக்கள் கொரோனாவாலும் அதன் பின்னர் பொருளாதர நெருக்கடியினாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்திலும் இந்த மக்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளார். இந்த பட்ஜெட்டின் மொத்த நிதியில் 0.1 வீதமே வடக்கு,கிழக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (20) இடம்பற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் மீதான 6 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணங்களாக வடக்கு,கிழக்கு மாகாணங்கள் உள்ளன. ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் இன்று வரை விசேட தேவையுடைய மாகாணங்களாக வடக்கு,கிழக்கு அறிவிக்கப்படவில்லை.
வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் பொருளாதாரங்களும் பாதுகாக்கப்படவில்லை. நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு சமாந்தரமாக வடக்கு,கிழக்கு மாகாணங்கள் கணிக்கப்பட்டு பெரும் அநீதி இழைக்கப்படுகின்றது.
மைத்திரி -ரணில் ஆட்சிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது. ஆனால் அந்த நல்லாட்சி வரவு செலவுத்திட்டத்திலும் வடக்கு,கிழக்கு முற்றாக புறக்கணிக்கப்பட்டது.
சர்வதேச உதவி வழங்குவோர் மாநாட்டை நடத்தி அதன் மூலம் வடக்கு,கிழக்கு அபிவிருத்தி செய்யப்படுமென உறுதி வழங்கப்பட்டது ஆனால் அதற்குள் 52 நாள் ஆட்சி மாற்றம் வந்ததால் எதுவும் நடக்கவில்லை.
அதேவேளை கடந்த 15 வருட வரவு செலவுத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில் சில முன்னேற்றகரமான விடயங்களும் இதில் உள்ளன.
அவற்றை நாம் வரவேற்றுத்தானாக வேண்டும், பூநகரித்திட்டம், பாலியாறு குடிநீர்திட்டம். மீள்குடியேற்றம், வீடமைப்புத் திட்டம் ,காணாமல்போனோருக்கான ஒதுக்கீடுகள் என சில விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் இவை நடந்தேறுமா என்றபலமான சந்தேகம் எமக்குள்ளது. , ரணில் விக்கிரமசிங்க பாரியதொரு நாடகத்தினை நடத்தியே ஆட்சியைப்பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் அனைத்துக்கட்சி மாநாட்டை நடத்தினார். நாம் அதில் பங்கேற்கவில்லை.
அதில் 13 ஆவது அரசியலமைப்புத்திருத்தம் , காணி, பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தமிழ் கட்சிகளுக்கு வாக்குறுதி வழங்கினார். ஆனால் இன்றுவரை எதுவும் நடைபெறவில்லை என்றார்.