அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்டுள்ளது!
தமக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட இடைநிறுத்தப்பட்ட தண்டனையை இரத்துச் செய்து, தன்னை விடுவிக்குமாறு கோரி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலிக்க எதிர்வரும் 27ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (20.11) சம்பத் அபேகோன் மற்றும் பி. குமரன் ரத்தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டார். மனுவை பரிசீலிக்க வரும் 27ம் திகதி அழைக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றையும் நியமித்துள்ளார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முதலமைச்சராக இருந்த போது காணி மீட்பு தொடர்பில் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 64 மில்லியன் ரூபாவை பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இதனடிப்படையில் அவருக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 05 வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் குறித்த தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி பிரசன்ன ரணதுங்க இந்த மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.