மன்னார் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை காரணம் காட்டி நிதி மோசடி?
மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு என மன்னார் நலன்புரி சங்கம் பிரான்ஸின் இசை நிகழ்ச்சி ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டு வருவதாக அண்மைக்காலமாக விளம்பரங்கள் வெளிவந்த நிலையில் இது தொடர்பாக பல்வேறு ஆதாரபூர்வமான உண்மைகள் வெளிவந்துள்ளன.
குறிப்பாக மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளி அமைப்புகளை சந்தித்து கலந்துரையாடியதாகவும் மாவட்ட அரசாங்க அதிபருடன் மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கியராச்சியத்தின் தலைவர் அண்மையில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் கடந்த மூன்று வருடங்களாக(2021,2022.2023) மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் எந்த ஒரு கலந்துரையாடலும் இடம் பெறவில்லை என மன்னார் மாவட்ட செயலகத்தில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் மன்னார் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்காக நிதி சேகரிப்பது தொடர்பில் தங்களிடம் எந்த புலம்பெயர் நாடுகளை சேர்ந்த அமைப்புகளோ,அமைப்புகளின் தலைவர்களோ தெரிவிக்கவில்லை எனவும் குறித்த இசை நிகழ்ச்சிக்கும் மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி அமைப்பான தேனீ அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த அமைப்பினரின் இசை நிகழ்ச்சி தொடர்பிலும் அவர்களின் நிதி சேகரிப்பு தொடர்பிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அண்மைக்காலங்களில் புலம்பெயர்நாடுகளில்,போரினால் பாதிக்கப்பட்ட மக்கள்,மாவீரர் தினத்தை,மாவீரர் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை காரணம் காட்டி பல்வேறு அமைப்புகள் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், மேற்படி தகவல் பல கேள்விகளை தோற்றுவித்துள்ளது.