இந்த அரசாங்கம் இலங்கையில் இன முரண்பாடுகளை முன்னெடுத்து வருகிறது : டக்ளஸ் தேவானந்தா!
இந்த அரசாங்கம் இன முரண்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும், ஒரு சிலர் தங்களது சுயலாப அரசியலுக்காக கருத்துக்களை முன்வைத்து வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முந்தைய அரசாங்கங்கள் இத்தகையதொரு மனோ நிலையில் செயற்பட்டு வந்திருந்ததை நானே பல தடவைகள் பல இடங்களிலும் பகிரங்கமாக தெரிவித்துள்ளேன்.
அதுதான் உண்மை. ஆனால், இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்த நாட்டில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கங்கள் இத்தகைய மனோ நிலையில் இல்லாமல், இனங்களுக்கிடையில் ஐக்கியத்திற்கான வழிமுறைகளை முன்னிட்டு, செயற்பட்டு வந்திருப்பதையே எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான அரசாங்கங்கள் இத்தகைய நிலைப்பாட்டினை எடுத்து வந்திருந்த போதிலும், எமது தரப்பில் அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கு எம்மைத் தவிர வேறு எவரும் முன்வரவில்லை என்பதே எமது வரலாற்றின் உண்மை நிலைமையாகும்.
இதைவிடுத்து சுயலாப அரசியல் நலன்களுக்காக தொடர்ந்தும் அரசாங்கங்களைக் குறைகூறிக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல. எந்தத் தரப்பிலும் ஒரு சில புல்லுருவிகள் இல்லாமல் இல்லை. அதற்காக ஒட்டுமொத்த தரப்பினர் மீதும் தொடர்ந்து பலிபோட்டுக் கொண்டிருப்பது மானுட தர்மத்திற்கே உகந்த செயல் கிடையாது.
கிழக்கு மாகாணத்திலே மயிலத்தமடு பகுதியில் உண்மையிலேயே கால்நடை வளர்ப்போருக்கு மேய்ச்சல் தரை தொரடர்பில் பிரச்சினை இருந்து வருகின்றது. இது தொடர்பில் பல வருடங்களுக்கு முன்னர் நான் நாடாளுமன்றத்திலே பிரச்சினை எழுப்பியிருக்கிறேன்.
இந்த விடயம் தொடர்பில் எமது மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கையினை எடுத்துள்ளார். அதனை செயற்படுத்துவதில் சில தாமதங்கள் ஏற்படுகின்றன. எனவே, இது தொடர்பில் ஜனாதிபதி தனது அவதானத்தினை மீளவும் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.