இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா இன்று இந்தியா செல்கிறார்!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா இன்று (18.11) இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கும் அவர்களது பயிற்றுவிப்பாளர்களுக்கும் பணம் வழங்கும் நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் பொருளாளர் சுஜீவ கொடலியெத்த இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, 2024ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னரே திட்டமிட்டபடி நடாத்துவதற்கும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக கிரிக்கெட் களத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள விசேட அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினரான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் அங்கத்துவத்தை மீளப் பெறுவதற்கு அரசாங்கம் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், ஆசிய கிரிக்கட் தலைவர், சர்வதேச கிரிக்கெட் சபை அதிகாரிகள் மற்றும் ஐ.சி.சி உறுப்பு நாடுகளின் கருத்துக்களுக்கு அரசாங்கம் வருத்தமும் கண்டனமும் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.