நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உயர் அழுத்த ஹீட்டர் செயழிலப்பு!
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தின் உயர் அழுத்த ஹீட்டர் அமைப்பு திடீரென செயலிழந்ததன் காரணமாக நேற்று (17.11) இரவு முதல் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இந்த செயலிழப்பை சரிசெய்ய தேவையான பூர்வாங்க பணிகளை மின்வாரிய ஊழியர்கள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அனல்மின் நிலையத்தின் மூன்றாவது ஜெனரேட்டரின் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து தற்போது அதன் சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, இந்த மூன்றாவது ஜெனரேட்டரில் விரைவில் மின்சாரம் தயாரிக்க முடியும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மின்சார விநியோகம் தடைபடாது என்றும் இந்த பராமரிப்பு காலத்தில் அதிகபட்சமாக நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை செயற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.