நீரிழிவை ஆரம்பத்திலே வெல்லும் இலகு வழி

#Health #Lanka4 #ஆரோக்கியம் #diabetes #லங்கா4 #அன்டனி தேவராஜ் #Antoni Thevaraj #நீரிழிவு #சலரோகம் #Hypertension
Mugunthan Mugunthan
2 months ago
நீரிழிவை ஆரம்பத்திலே வெல்லும் இலகு வழி

உணவே மருந்து; மருந்தே உணவு என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும். குறிப்பாக நீரிழிவு நோய்க்கு இது மிகவும் பொருந்தும். நீரிழிவு நோயைப் பொறுத்தவரை உணவுதான் அதற்கான சிகிச்சையில் பெரும்பங்கு வகிக்கிறது. உணவுக் கட்டுப்பாடு, மருத்துவம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் சேர்ந்துதான் நீரிழிவு நோயை அதிகமாக்காமல்.. அதன் தாக்கத்தை அதிகப்படுத்தாமல் தடுக்கின்றன.

 இதோடு மன வலிமையும் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘எனக்கு சர்க்கரை நோய் இருக்குமோ’ என்ற சந்தேகம் வந்தவுடன் பலர் மன உறுதியை இழந்து விடுகின்றனர். அவர்கள் மனதில் பயம் குடி கொண்டு விடுகிறது. சிலர், சர்க்கரை பரிசோதனை செய்ய தயங்கி அப்படியே விட்டுவிட்டு பின்னால் பெரிதும் சிரமமப்படுகின்றனர். 

சர்க்கரை நோய் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தவுடன் உடனே ரத்த பரிசோதனை செய்து கொள்வதுதான் சாலச் சிறந்தது. ஏனென்றால் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட காலத்தில் மிகக் குறைவான தாக்கத்தையே நீரிழிவு நோய் ஏற்படுத்தி இருக்கும்.

 அந்த ஆரம்பக் கட்டத்தில் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியுமே போதும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால், சந்தேகம் ஏற்பட்டவுடன் சர்க்கரை பரிசோதனை செய்து கொள்வதுதான் நல்லது. அதன்பிறகு நீரிழிவு நோய் கட்டுப்பாடு சற்று அதிகம் தேவைப்பட்டால், மாத்திரை உட்கொண்டு அக்கறையோடு உணவு கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.

 இந்த நிலையிலும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வராது அதிகரித்துவந்தால் அல்லது உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியை நோயாளி சரியாகப் பின்பற்ற இயலாதவராக இருந்தால் இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்வது அவசியம்.

 ஏனென்றால், ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் கால்கள், சிறுநீரகம், அதைச் சார்ந்த உறுப்புகளையும், இதயம், கண், மூளை, நரம்பு போன்ற உடலுறுப்புகளையும் பாதித்து மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

 ரத்த ஓட்டம் பெருமளவில் பாதிக்கப்படும். உணவைக் கட்டுப்படுத்துவது என்பது அளவை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. அதன் தரத்தை, வகையைக் கட்டுப்படுத்துவதே ஆகும். 

பொதுவாக அனைவருக்கும் சமச்சீரான உணவு தேவை. அதிலும் குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு சமச்சீரான உணவு அவசியம். அவர்களுக்கு என்றே தனி சமச்சீரான உணவு உள்ளது. மற்றவர்களிடம் இருந்து அதில் சிறிய அளவு மாற்றமே இருக்கும்.

images/content-image/1693899265.jpg

 மாவுச்சத்து மிகுந்த கார்போஹைட்ரேட்டின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டு, அதை ஈடுகட்டும் விதத்தில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் மிகுந்த காய்கறிகளும் இனிப்புக் குறைவான பழங்களும் அதில் இடம்பெறும்.

 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி போன்ற தானியங்களைக் குறைத்து பருப்பு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். தானியங்கள் – அரிசி, கோதுமை, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, பருப்பு – பட்டாணி, பருப்பு வகைகள், எள், குறிப்பிட்ட பழவகைகள் ஆகியவற்றை அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.

 கீரை வகைகள், குறிப்பாக முருங்கை, வெந்தயக்கீரை, வல்லாரைக் கீரை, வாழைக்காய் தவிர்த்த காய்கறிகள், எலுமிச்சம் பழம், வாழைத்தண்டு ஆகியவற்றை அதிகப்படியாக எடுத்துக் கொள்ளலாம். 

இவையெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காதே என்று நீங்கள் ஒதுங்கினால், சர்க்கரைக்கு உங்களை ரொம்ப பிடித்து விடும். நீரிழிவு நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் குறித்து நீண்ட பட்டியலே உள்ளது. 

நெய், வெண்ணெய், பாலாடை கட்டி, சர்க்கரை, வெல்லம், தேன், முந்திரி, பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகள், தேங்காய், இளநீர், குளிர் பானங்கள், சத்துமாவு, பானங்கள், பூஸ்ட், ராகிமால்ட், ஹார்லிக்ஸ், போர்ன்விடா, ஓவல்டின், உலர்ந்த பழ வகைகள், மா, பலா, வாழை, சப்போட்டா, திராட்சை போன்ற இனிப்பு மிகுந்த பழங்கள், ஐஸ்கிரீம், பீட்ஸா போன்ற பேக்கரி தயாரிப்புகள், இனிப்பு சேர்த்த பிஸ்கட், ஜாம், ஜெல்லி, சாஸ், மது வகைகள், சிகரெட், சர்க்கரை சேர்த்த காபி, டீ போன்றவற்றை நீரிழிவு நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும்.

 இதில், டீ, காபி ஆகியவற்றை சர்க்கரை சேர்க்காமல் ஒரு நாளைக்கு 3 வேளை மட்டும் குடிக்கலாம். இஞ்சி, மஞ்சள், வெங்காயம், பூண்டு, முள்ளங்கி தவிர நிலத்தின் அடியில் விளையும் கிழங்குகள் அனைத்தையும் நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி இவற்றோடு மன உறுதியும் இருந்து ஆரம்பத்திலேயே சர்க்கரையை நோய் கண்டு கொண்டால், அதை எப்போதும் நம்முடைய கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL

தகவல் மற்றும் ஆலோசனை

images/content-image/1693899699.jpg

மேலும் மரண அறிவித்தல்களுக்கு