பாடசாலை விடுமுறை நாட்களை குறைக்க திட்டம் - பிரான்ஸ் ஜனாதிபதி

#School #France #President
Prasu
11 months ago
பாடசாலை விடுமுறை நாட்களை குறைக்க திட்டம் - பிரான்ஸ் ஜனாதிபதி

பாடசாலை விடுமுறை நாட்களை குறைப்பதற்கு விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பெற்றோர்களிடையே விவாதத்தை தோற்றுவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கோடைக்கால விடுமுறையின் பின்னர் நாடு திரும்பிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் Le Point இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கல்வி நடவடிக்கையில் பின்தங்கியிருப்பதாக மதிப்பிடப்பட்ட மாணவர்கள் செப்டெம்பர் மாதம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பதிலாக ஓகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை நடைபெறாத நிலையில் பெரும்பாலும் ஜூன் மாதம் நிறைவு செய்வதற்கு அனுமதிக்கப்படும் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரான்ஸில் ஆண்டு ஒன்றுக்கான பாடசாலை விடுமுறையானது இரண்டு வாரங்கள் அதிகமாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் கோடைகால விடுமுறை அதிகமாக வழங்கப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த நிலையில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பாடசாலை விடுமுறை நாட்களை மீள் பரிசீலனை செய்ய விரும்பினால், அது கோடைகால விடுமுறை மாத்திரமன்றி ஆண்டு முழுவதுமான விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டதாக இருக்க வேண்டுமென ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 

 அத்துடன், பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தானது காலநிலை யதார்த்தம் தொடர்பில் கவனம் செலுத்தாதுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.