பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் 15வது பிரிக்ஸ் மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்ட இந்த மாநாடு, இந்த ஆண்டு நேரில் நடக்கும் நிகழ்வாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோஹன்னஸ்பர்க் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி விமானம் மூலம் சென்றடைந்தார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, அவரை வரவேற்பதற்காக அங்குள்ள இந்திய வம்சாவளியினர் ஜோஹன்னஸ்பர்க் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.



