நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் வெந்தயத்தின் முக்கியத்துவம்

#Health #Lanka4 #ஆரோக்கியம் #லங்கா4 #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Antoni #Theva #Antoni Thevaraj
நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் வெந்தயத்தின் முக்கியத்துவம்

தற்போது உலகம் முழுவதும் அதிகமான மக்களைத் துன்புறுத்தும் நோயாக நீரிழிவு உருவெடுத்துள்ளது. இந்த நோயால் பலரும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தத் தினமும் மருந்து, ஊசி, மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவது, எல்லோருக்கும் உவப்பான ஒன்றாக இருக்காது.

 இந்த நிலையில் நீரிழிவு நோயைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தும் தன்மை, வெந்தயத்துக்கு உள்ளது மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. வேதிப்பொருட்கள் வெந்தயத்தில் நிறைய வேதிப்பொருட்கள் உள்ளன. அவற்றில் இன்சுலின் சாராத நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வேதிப்பொருட்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்:

 1. குயிர்செடின் (Quercetin)

 2. டிரைகோனலின் (Trigonelline)

 3. டைசோஜெனின் (Diosgenin)

 4. கேலக்டோமனான் (Galactomannan)

 5. 4 ஹைட்ராக்சி ஐசோலூசைன் (4 hydroxyisoleucine)

 ஒவ்வொன்றின் செயல்பாடுகளை விளக்கமாகப் பார்ப்போம்:

 குயிர்செடின் (Quercetin)

 இது மருத்துவக் குணம் கொண்ட பிளேவனாய்டு. இது நீரிழிவு நோயைப் பல்வேறு வகைகளில் கட்டுப்படுத்துகிறது:

 அ) குடலில் சர்க்கரை (குளுகோஸ்) உறிஞ்சப்படும் நிலையில் தடுக்கப்படுவதால், ரத்தத்தில் குளுகோஸ் உயர்வதைத் தடுக்கிறது.

 ஆ) ரத்தத்தில் குளுகோஸ் அளவை கட்டுப்படுத்தும் நாளமில்லா சுரப்பியான இன்சுலினைச் சுரக்கக்கூடிய கணையச் செல்களை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல் அழியாமலும் பாதுகாக்கிறது.

 இ) ரத்தத்தில் உள்ள குளுகோஸை தசைகள் அதிகம் எடுத்துக்கொள்ளத் துணைபுரிவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது

டிரைகோனலின் (Trigonelline)

 இது ஆல்கலாய்டு வகையைச் சேர்ந்த வேதிப்பொருள். வெந்தயத்தைச் சட்டியில் இட்டுப் பொன்வறுவலாக வறுக்கும்போது, அதன் கசப்புத்தன்மை குறையும். இவ்வாறு வறுக்கும்போது டிரைகோனலின் என்ற ஆல்கலாய்டு வேதிமாற்றம் அடைந்து நிக்கோடினிக் அமிலம் என்ற வைட்டமின் பி 3-யாக உருவாகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் வறுத்த வெந்தயத்தை உட்கொண்டால் வைட்டமின் பி 3 குறைவால் ஏற்படும் நோய்களான வாய்ப்புண்; கழிச்சல் போன்றவை தடுக்கப்படும்.

 முளைகட்டிய வெந்தய விதையிலும் வைட்டமின் பி 3 உருவாகிறது என்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.

 டைசோஜெனின் (Disogenin)

 வெந்தயத்தில் உள்ள சப்போனின் வகையைச் சேர்ந்த வேதிப்பொருள் இது. நோய் அறிகுறிகளை உடனடியாகக் குறைக்கும் ஸ்டீராய்டுகள் என்ற ஆங்கில மருந்துகளைச் செயற்கையாகத் தயாரிக்க உதவும் மூலப்பொருள் இது.

 ரத்தத்தில் உள்ள கொழுப்பை இந்த வேதிப்பொருள் மலம் வழியாக வெளியேற்றுவதால், நீரிழிவின் துணைநோயான ரத்தக்கொழுப்பின் அளவை உடலில் குறைத்து, சரியான விகிதத்தை அடைய உதவுகிறது. 

அத்துடன், ரத்தக் குளுகோஸ் அளவையும் கட்டுப்படுத்துகிறது.

 கேலக்டோமனான் (Galactomannan)

 வெந்தயத்தில் உள்ள கரையும்தன்மை கொண்ட நார் பொருள் இது. இந்த வேதிப்பொருள்தான் நீரில் வெந்தயத்தை ஊற வைக்கும்போது ஏற்படும் வழுவழுப்பு தன்மைக்குக் காரணம். 

இது மலச்சிக்கலை நீக்கும்; ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை குறைக்கும்; கல்லீரலைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது.

 4 ஹைட்ராக்சி ஐசோலூசைன் (4 hydroxyisoleucine)

 வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் இது. ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்ந்திருந்தால் மட்டுமே, இன்சுலினைச் சுரக்கத் தூண்டி ரத்தச் சர்க்கரையைச் சரியான அளவுக்குக் கொண்டுவரும் இதன் சிறப்பான செயலால், நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உணவாக நமது அஞ்சறைப் பெட்டியில் இடமளித்த முன்னோர் அறிவு வியக்கும்படி உள்ளது.

 நீரிழிவுக்கு மருந்தாக…

 நீரிழிவு நோய்க்கு மருந்தாக 10 கிராம் வெந்தயத்தை எடுத்து வெந்நீர் விட்டு 3 மணி நேரம் ஊற வைத்த பின், வடிகட்டி குடிக்கலாம். உணவுக்குப் பின் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் இதை எடுத்துக்கொள்ளலாம். நோயின் ஒவ்வொரு அறிகுறிகளுக்கும் ஒரு மாத்திரை என உட்கொள்ளும் காலத்தில் வாழ்கிறோம்.

 இந்த நிலையில் நீரிழிவு நோய் காரணமாக உருவாகும் பல்வேறு அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும், அனைத்து வேதிப்பொருட்களும் வெந்தயத்தில் இடம்பெற்றிருப்பது, நீரிழிவு நோய்க்கு இயற்கை அளித்த கொடை. எனவே, வெந்தயத்தை உரிய அளவில் உணவில் சேர்த்து, நீரிழிவு இல்லாத உலகைப் படைப்போம்.

https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL

தகவல் மற்றும் ஆலோசனை

images/content-image/1692429503.jpg