சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முற்பட்ட ஏழுபேர் கைது!
இலங்கையில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது மனித கடத்தல் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்கள் இதற்கு சான்றாக அமைக்கின்றன. அந்தவகையில் கடந்த வாரத்தில் வடமாகாணத்தை சேர்ந்த ஏழுபேர் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது தடுத்து நிறுத்தப்பட்டதாக குடிவரவு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவத்த அவர், ஆட்கடத்தல் காரர்கள், ஐந்து மில்லியன் ரூபாய் வரையில் வசூலித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் பாக்கு நீரிணை மற்றும் பிற கடல் வழிப் பாதைகளில் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வான்வழிப் பாதையை தேர்ந்தெடுப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மார், வியட்நாம் மற்றும் கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் பயணிப்பதாக நம்பப்படுகிறது எனவும் பின்னர் அவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டு ஐரோப்பாவை நோக்கிச் செல்வதாகவும் குடிவரவு கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.