அருச்சுனனைக் கொன்ற அவன் மகன் பப்ருவாஹன் - புராணக் கதை

#spiritual #ஆன்மீகம்
Mugunthan Mugunthan
9 months ago
அருச்சுனனைக் கொன்ற அவன் மகன் பப்ருவாஹன் - புராணக் கதை

அர்ஜூனன் தனது மகனாலேயே போரில் வீழ்த்தப்பட்டு, அம்பு எய்தி கொல்லப்பட்ட சம்பவம். இது உண்மை தானா என்ற கேள்வியும் கூட பலரும் எழும்.

 வில்லுக்கு விஜயன் என சொல் வழக்கில் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த அளவிற்கு வில் வித்தையில் மாவீரன் என வரலாற்றில் போற்றப்படும் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன், தனது சொந்த மகனாலேயே அம்பு எய்தி கொல்லப்பட்டான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

 இது எப்படி நடந்தது, இந்த அதிர்ச்சி தகவலுக்கு என்ன காரணம் -

 குருஷேத்திர போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகின. அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்த யுதிஷ்டிரன், தனது வலிமை காட்டுவதற்காக அஸ்வமேத யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தான்.

 யாகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாரானது. ராஜ்ஜியங்களை சுற்றி வர யாக குதிரை அவிழ்த்து விட்டது. அதை பாதுகாக்க அர்ஜூனன் தனது படைகளுடன் குதிரையை பின் தொடர்ந்து சென்றான். 

அந்த குதிரையும் பல ராஜ்யங்களுக்கு சென்றது. அர்ஜூனன் எச்சரிக்கையை மீறி பல ராஜ்யங்களை சேர்ந்த மன்னர்களும் அந்த குதிரையை பிடித்து, அர்ஜூனனுடன் போர் புரிந்தனர். ஆனால் அர்ஜூனனில் வில் வித்தைக்கு முன் தாக்கு பிடிக்க முடியாமல் அனைவரும் பயந்து பின்வாங்கினர்

 பல ராஜ்யங்களை கடந்த யாக குதிரை கடைசியாக அர்ஜூனனின் மகன் பப்ருவாஹன் ஆட்சி செய்த மணிபூரா தேசத்திற்குள் சென்றது. பப்ருவாஹன், அர்ஜூனனுக்கும் சித்ரங்கதாவிற்கும் பிறந்த மகன் ஆவான். 

தனது தந்தை நாட்டிற்கு வருவதை அறிந்து, எல்லைக்கு சென்று, வரவேற்று அழைத்து வந்தான். ஆனால் அர்ஜூனனோ, பப்ருவாஹனா...நீ என்னுடைய மகன். யாக குதிரையை மடக்கி பிடித்து, போர் செய்வது தான் சத்திரிய தர்மம்.

 சத்திரியனாக இல்லாதவனுக்கு அரசனாக இருக்க தகுதி கிடையாது. ஆனால் நீயோ எதிரியான என்னுடன் போர் செய்யாமல், பணிந்து வரவேற்கிறாயே. இது தான் சத்திரியனுக்கு அழகா? உனக்கு தைரியம் இருந்தால் குதிரை பிடித்து, என்னுடன் சண்டையிடு என்றான்.

 ஆனால் தந்தையுடன் சண்டையிட விரும்பாத பப்ருவாஹன், அர்ஜூனனின் வார்த்தைகளை கேட்டு மனமுடைந்து, அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.

 அப்போது அர்ஜூனனின் மற்றொரு மனைவியான உலூபி இதை கேள்விப்பட்டு பப்ருவாஹனை சந்தித்து, நானும் உன்னுடைய தாய் தான். உன்னுடைய தந்தையான அர்ஜூனன் மிகப் பெரிய வீரர். அவருடைய மகனான நீ இப்படி சண்டையிட தயங்குவது சரியல்ல. 

குதிரையை பிடித்து, அர்ஜூனனுடன் போரிட்டு, நீ யார் என்பதை நிரூபித்து காட்டு என்றாள். இதை கேட்ட பப்ருவாஹன், நீங்கள் சொல்வது சரி தான் தாயே...ஆனால் தான் தந்தையுடன் சண்டையிட விரும்பாமல் தான் திரும்பி வந்தேனே தவிர, போர் செய்ய தயங்கவில்லை.

 எப்படி இருந்தாலும் என்னுடைய தாயாகிய நீங்களே அனுமதித்த பிறகு நான் என் தந்தையை எதிர்த்து போர் செய்கிறேன். என்னுடைய பெற்றோர்களின் பெருமையை காக்கிறேன் என அர்ஜூனனுடன் சண்டையிட புறப்பட்டான்.

 யாக குதிரையை பிடித்த பப்ருவாஹன், அர்ஜூனன் மீது அம்புகளே தொடுத்தான். மகனின் வில் வித்தை திறமையை கண்டு பூரித்து, மகிழ்ந்தான் அர்ஜூனன்.

 மகனை பாராட்டிய அர்ஜூனன் பதிலுக்கு தானும் அம்புகளை தொடுத்தான். இருவரும் மாறி மாறி தீவிரமாக அம்பு மழை பொலிந்தனர். கடைசியாக அர்ஜூனனின் இதயத்தை நோக்கி, பப்ருவாஹன் அம்பு ஒன்றை எய்தினான். பதிலுக்கு அர்ஜூனனும் அம்பு விட்டான். இந்த அம்புகளால் தாக்கப்பட்டு இருவரும் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.

 இந்த தகவலை அறிந்து உலூபியும், சித்ரங்கதாவும் போர்களத்திற்கு வந்தனர். இருவரும் மயங்கி கிடப்பதை கண்டு பதறி போன சித்ரங்கதா, அனைத்திற்கம் நீ தான் காரணம். நீ தான் அர்ஜூனனுடன் போரிடும் படி பப்ருவாஹனை தூண்டி விட்டாய். 

அதன் விளைவு தான் இருவரும் மடிந்துள்ளனர். நீயும் அவருக்கு மனைவி தானே? உனக்கு தர்மம் தெரியாதா? அர்ஜூனன் போன்ற மாவீரனுக்கு எதிராக போர் புரியுமாறு ஒரு சிறுவனை தூண்டி விட்டுள்ளாயே? இவை அனைத்திற்கும் நீ தான் பொறுப்பு. அவர்களை மீண்டும் நினைவிற்கு வர வைப்பது உன்னுடைய பொறுப்பு என கோபமாக உலூபியை திட்டி தீர்த்தாள்.

 சிறிது நேரத்தில் பப்ருவாஹன் கண் விழித்தான். ஆனால் அர்ஜூனன் எழவேயில்லை. உலூபியின் பேச்சை கேட்டு தான் அறிவு இழந்து விட்டதாகவும், தனது தந்தையை தானே தனது கைகளால் கொன்று விட்டதாகவும், இந்த குற்ற உணர்ச்சி தன்னை வாழ்நாள் முழுவதும் கொல்லும் என்றும், தனக்கு மரணத்திற்கு பிறகும் நற்கதியே கிடைக்காது. தான் பெரும் பாவம் செய்து விட்டதாக புலம்பி அழுதான் பப்ருவாஹன்.

 தனது தந்தை இல்லாத உலகின் தான் வாழ விரும்பவில்லை என சாக துணிந்தான். அப்போது குறுக்கிட்டு அவனை தடுத்தாள் உலூபி. கண்களை மூட மந்திரம் ஜபித்த உலூபியின் கைகளில் தெய்வீக வைரம் ஒன்று வந்தது. அப்போது உலூபி, உங்கள் இருவருக்கும் என்ன பைத்தியமா? அர்ஜூனன் யார்? தேவேந்திரனின் மகன். அவருக்கு எப்படி மரணம் நிகழும்? அவர் மாபெரும் வீரர். நான் காரணமாக தான் உனது தந்தைக்கு எதிராக உன்னை போர் செய்ய தூண்டினேன்.

 அவர் தூக்கத்தில் இருந்து எழுவதை போல் தான் எழுவார். அவருக்கு ஒன்றும் ஆகாது எனக் கூறி, தன்னிடம் இருந்த வைரத்தை அர்ஜூனனின் இதயத்தின் மீது வைத்தாள் உலூபி.

 சிறிது நேரத்தில் அர்ஜூனன் கண் விழித்து எழுந்தான். இங்கு என்ன நடக்கிறது? இது போர்களமாயிற்றே இங்கு எப்படி நீங்கள் இருவரும் வந்தீர்கள் என ஒன்றும் புரியாமல் கேட்டான் அர்ஜூனன். 

அப்போது நடந்த உண்மைகளை அனைவருக்கும் விளக்கினாள் உலூபி. எந்த தவறும் நடக்கவில்லை. நீங்கள் உங்கள் மகனின் கைகளால் கொல்லப்பட்டதற்கு காரணம் உள்ளது. உங்களுக்கு புது வாழ்க்கை கொடுக்க தான் நான் இங்கு வந்தேன் என்றாள் உலூபி.

 தொடர்ந்து பேசிய அவள், ஒரு நாள் நானும் எனது தந்தை வசுசும் கங்கையில் புனித நீராடினோம். அப்போது எனது தந்தை முன் தோன்றிய கங்கா தேவியிடம், கங்கை மைந்தனான பீஷ்மர் தங்களால் அம்பு படுக்கையில் கிடத்தப்பட்டு, உயிரிழந்தார் என்றார்.

 பீஷ்மரை கொடூரமாக கொன்று அதன் மூலம் வெற்றியை பெற்ற அர்ஜூனனை சபிக்க எண்ணுகிறேன் என்றார். அதை கங்கையும் ஏற்றாள். அவர்கள் பேசிக் கொண்டதை கேட்ட நான், எனது தந்தையிடம் உங்களுக்காக மன்றாடினேன்.

 உங்களை சாபத்தில் இருந்து காப்பாற்ற எண்ணினேன். கடைசியாக எனது கோரிக்கையை ஏற்ற வசுஸ், அர்ஜூனன் தனது மகனின் கைகளால் கொல்லப்பட்டு, தோல்வி அடைந்தால் மட்டுமே அவன் பீஷ்மரை கொன்ற பாவம் போகும் என்றார்.

 அந்த சமயத்தில் தான், யாக குதிரையை தொடர்ந்து நீங்க வந்தீர்கள். இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த நான் பப்ருவாஹனை உங்களுக்கு எதிராக போர் செய்யும் படி தூண்டினேன்.

 நான் எதிர்பார்த்தது போலவே நீங்கள் தோல்வி அடைந்து, உயிரிழக்கவும் செய்தீர்கள். இப்போது உங்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கி விட்டது. நாக வைரத்தின் சக்தியால் நீங்கள் மீண்டும் உயிர் பிளைத்துள்ளீர்கள் என்றாள்.

 உலூபியின் இந்த வார்த்தைகளை கேட்ட அர்ஜூனன் மகிழ்ச்சி அடைந்தான். சில காலம் அவர்களுடன் தங்கி இருந்த பிறகு பப்ருவாஹன், சித்ரங்கதா, உலூபி ஆகிய மூவரிடமும் விடைபெற்று மீண்டும் யாக குதிரையை பின் தொடர்ந்து சென்றான் அர்ஜூனன்.